2013-03-22 16:17:37

திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழ்மையை ஒழிப்பதற்கு மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


மார்ச்,22,2013. உண்மையின்றி, உண்மையான அமைதி கிடையாது, ஒவ்வொருவரும் பிறரின் நலனில் அக்கறை காட்டாமல், தங்களது சொந்தக் கோட்பாட்டின்படியும், தங்களது உரிமைகளையே எப்பொழுதும் கேட்டும் வாழ்ந்தால் உண்மையான அமைதியை அடைய முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருப்பீடத்துடன் அரசியல் உறவு வைத்துள்ள 180 நாடுகளின் தூதர்களை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உரோம் ஆயருக்குரிய சிறப்புப் பெயர்களில் திருத்தந்தையும் ஒன்று எனச் சொல்லி, திருத்தந்தை என்பவர், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலங்களைக் கட்டுபவராக இருக்கிறார் எனக் கூறினார்.
நமக்கிடையேயான உரையாடல், அனைத்து மக்களையும் இணைக்கும் பாலங்களைக் கட்டுவதற்கு உதவ வேண்டுமென்ற திருத்தந்தை, கடவுளை மறந்து மக்களுக்கு இடையே பாலங்களைக் கட்ட இயலாது என்றும் கூறினார்.
பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையை ஒழிக்கவும், அமைதியைக் கட்டியெழுப்பவும், உறவுப்பாலங்களை உருவாக்கவும் இங்குள்ள நாடுகள் முயற்சிக்க வேண்டுமெனத் தான் விரும்புவதாக, அரசியல் தூதர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முஸ்லீம்களுடன் உரையாடலை ஆழப்படுத்தவும், வறுமையை அகற்றவும் நாடுகள் உழைக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தான் பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிந்துகொண்டதன் பொருளையும் விரிவாக விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.