2013-03-21 15:16:39

புனிதபூமி கத்தோலிக்க நீதி, அமைதிப் பணிக்குழு அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள செய்தி


மார்ச்,21,2013. 46 ஆண்டுகளாக ஆக்ரமிக்கப்பட்டப் பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களும் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று புனிதபூமி கத்தோலிக்க நீதி, அமைதிப் பணிக்குழு அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மார்ச் 20ம் தேதி, இப்புதனன்று அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா முதல் முறையாக இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள பயணம், பாலஸ்தீன மக்களின் துன்பங்களைத் தீர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல ஆண்டுகள் நிலவிவரும் போராட்டங்களால் பிரிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணையவும், அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் எவ்வித அடையாளமும் இன்றி வாழும் அவல நிலை தீரவும் அரசுத்தலைவர் ஒபாமா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இச்செய்தியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் புனிதபூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவு வெளியேறுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும் இச்செய்தியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுத்தலைவர் ஒபாமா இவ்வியாழனன்று எருசலேம் அகில உலக அரங்கில் உரையாற்றினார் என்றும், இவ்வெள்ளியன்று பெத்லகேமில் உள்ள இயேசு பிறப்புக் கோவிலுக்குச் சென்றபின், பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களை Ramallahவில் சந்திக்கிறார் என்றும் MISNA செய்திக்குறிப்பொன்று கூறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.