2013-03-20 16:19:08

திருத்தந்தை பிரான்சிஸ் : மதங்களுக்கிடையே நட்பும் மதிப்பும் முக்கியம்


மார்ச்,20,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப்பணியின் முதல் நாளாகிய மார்ச் 20, இப்புதன்கிழமையன்று பிரேசில் அரசுத்தலைவர் Dilma Roussef, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் முதலாம் Bartolomeo, மாஸ்கோ முதுபெரும் தலைவர் அலுவலகத்தின் வெளியுறவுத்துறைத் தலைவரான பேராயர் Hilarion ஆகியோரைத் திருப்பீடத்தில் தனித்தனியாகச் சந்தித்தார். அதன்பின்னர், ஆர்த்தடாக்ஸ் சபைகள், கீழைமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகள், மேற்கத்திய கிறிஸ்தவ சபைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும், யூதம், இசுலாம், பூர்வீக மதத்தினர் உட்பட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளையும் திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில், முதலில் தனக்கு வரவேற்புரை வழங்கிய சகோதரர் ஆன்ட்ரூவுக்கு நன்றி எனச் சொன்னார். கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ அவர்களே திருத்தந்தைக்கு அங்கிருந்தவர்கள் சார்பாக வரவேற்புரை வழங்கியவர். மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலையும், பல்வேறு மதத்தவரிடையே நட்பையும், மதிப்பையும் கத்தோலிக்கத் திருஅவை தொடரும் என இவ்வுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உரோம் ஆயராகவும், புனித பேதுருவின் வழிவருபவராகவும் எனது திருப்பணியின் ஆரம்பத் திருப்பலியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்ட உங்களது பிரசன்னத்தை ஆன்மீகரீதியாக உணர்ந்தேன். உங்களது வருகைக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் பல. எனது மதிப்புக்குரிய முந்தைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், உண்மையான உள்தூண்டுதலுடன் கத்தோலிக்கத் திருஅவைக்கு நம்பிக்கை ஆண்டை அறிவித்துள்ளார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் 50ம் ஆண்டின் நிறைவாக அவர் அறிவித்துள்ள நம்பிக்கை ஆண்டை நானும் தொடர விரும்புகிறேன். இது அனவைரின் விசுவாசப் பயணத்துக்கு உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கிறிஸ்தவ ஒன்றிப்பை எவ்வளவுதூரம் வலியுறுத்தியது என்பதை நாம் மறக்க இயலாது. இச்சங்கத்தைத் தொடங்கிய முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்கள் இறந்ததன் 50வது ஆண்டை விரைவில் நினைவுகூர இருக்கின்றோம். அவர், அந்தப் பொதுச் சங்கத்தின் தொடக்கவுரையில், இயேசு கிறிஸ்து தமது வானகத்தந்தையிடம் உருக்கமாகச் செபித்த அந்த ஒன்றிப்பை நிறைவேற்றுவதைக் கத்தோலிக்கத் திருஅவை தனது கடமையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆம், கிறிஸ்துவில் என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நமது மீட்பரின் இறுதி இரவு உணவு செபத்தில் நாம் அனைவரும் ஆழமாக ஒன்றித்திருப்பதாக உணருவோம். எனக்கு முந்தைய திருத்தந்தையர் வழியில், நானும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் பாதையை உறுதியுடன் தொடருவேன். உங்களது கிறிஸ்தவ சபைகளின் மக்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள் என்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவின் இதயத்துக்கு ஏற்றமுறையில் தனது மேய்ப்புப்பணியைத் தான் ஆற்ற தனக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். பின்னர் யூதர்களின் பிரதிநிதிகளுக்கெனத் தனது செய்தியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவதுபோல, இறைவனின் மீட்புத்திட்டப்படி, தனது விசுவாசம், தேர்வு ஆகியவற்றின் தொடக்கம் ஏற்கனவே குலமுதுவர், மோசே, இறைவாக்கினர் என்பவர்களிடம் காணப்படுகின்றது என்பதைக் கிறிஸ்துவின் திருஅவை ஒப்புக்கொள்கிறது. எனவே யூதமதத்தவரோடு பலனுள்ள சகோதரத்துவ உரையாடலைத் தொடருவோம் என்று சொல்லி பல்வேறு மதப் பிரதிநிதிகள், எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லீம் மதப் பிரதிநிதிகளை வாழ்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பல்வேறு மதத் மரபுகளைக் கொண்ட மனிதர்கள் மத்தியில் நட்பையும், மதிப்பையும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தைக் கத்தோலிக்கத் திருஅவை அறிந்தே தொடருவேன் என இவ்வுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒப்புரவையும், ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மனித வாழ்விலிருந்து கடவுளை விரட்டியடிக்கும் ஒரு முயற்சியாக அண்மையக் காலங்களில் நம்மிடையே வளர்ந்துள்ள வன்முறைகளை நாம் அனைவரும் அறிவோம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், உண்மை, நன்மைத்தனம், அழகு ஆகிய பண்புகளைப் போற்றி வளர்ப்பதே அனைத்து மதப் பாரம்பரியங்களிலும் சொல்லப்படும் கருத்துக்கள் என்பதை நாம் அனைவருமே உணரவேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய திருத்தந்தை, இதற்குப் பின்னர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இப்பிரதிநிதிகள் பரிசுப்பொருள்களையும் திருத்தந்தைக்குக் கொடுத்தனர். 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இச்சந்திப்பில் அனைவரும் மகிழ்ந்து விடைபெற்றனர். புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒவ்வொரு செயலும் அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டி வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.