2013-03-20 16:07:29

இறைவனின் பேரருள் கருணையில் திருத்தந்தை பிரான்சிஸ் அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளார் - அயர்லாந்தின் தலைமை ஆயர்


மார்ச்,20,2013. இவ்வுலக வாழ்வு கிறிஸ்துவுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஒருவாரமாக நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறார் என்று அயர்லாந்தின் தலைமை ஆயர் கர்தினால் Seán Brady கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிஎற்பு திருப்பலியில் கலந்துகொண்ட கர்தினால் Brady, கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ளவர்களை காப்பது நம் கடமை என்று திருத்தந்தை கூறியதை ஒரு முக்கியமான வேண்டுகோளாக எடுத்துச்செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
உலக மதிப்பீடுகள் நமது ஆன்மீகத்தில் கலந்து வருவதை பெரும் ஆபத்தென்று தன் ஆயர் பணிக்காலத்தில் திருத்தந்தை எடுத்துரைத்ததைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Brady, இவ்வகை ஆன்மீகம், கிறிஸ்து தேவையில்லை என்று உணர்த்தும் ஆன்மீகமாக மாறும் ஆபத்தையும் திருத்தந்தை கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
இறைவனின் பேரருள் கருணையில் திருத்தந்தை பிரான்சிஸ் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையை அவர் தெரிவு செய்துள்ள விருதுவாக்கு தெளிவாக்குகிறது என்பதையும் கர்தினால் Brady எடுத்துரைத்தார்.
சவால்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் திருஅவையை வழிநடத்தும் பணியை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அயர்லாந்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் தன்னுடன் இணைந்து செபிக்கும்படியாக கர்தினால் Brady தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.