2013-03-20 16:24:40

அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர் Chris : திருத்தந்தை பிரான்சிஸ் அன்பையும், மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டு வருவார்


மார்ச்,20,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமை ஆயராகவும், திருத்தந்தையாகவும் மார்ச்19, இச்செவ்வாயன்று பொறுப்பேற்றுள்ளார். இச்செவ்வாயன்று வத்திக்கான் வளாகத்தில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் நடைபெற்ற இவரின் பாப்பிறைப் பணியேற்புத் திருப்பலியில், இளவரசர்கள், அரசுத்தலைவர்கள், அரசியல் தூதர்கள், சர்வாதிகாரிகள், முதுபெரும் தலைவர்கள், யூதம், புத்தம், இந்து, சீக்கியம், ஜைனம் எனப் பல்சமயத் தலைவர்கள், மேய்ப்பர்கள் என 132 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தங்களின் நன்மதிப்பையும் மரியாதையையும் செலுத்தினர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் சார்பாக இத்திருப்பலியில் பங்கெடுத்த அந்நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர் Chris Smith தனது உணர்வுகளை வத்திக்கான் வானொலியில் பகிர்ந்து கொண்டபோது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்செயலர் அல்லது அமெரிக்க அரசுத்தலைவர் அல்லது வேறு எந்த உலகத்தலைவர் போல் இல்லாமல், அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிப்பதில் திருத்தந்தை தனிப்பட்ட இடத்தைக் கொண்டுள்ளார் என்று கூறினார். வெறுப்பையும் பழிவாங்கும் உணர்வையும் புறந்தள்ளி, அன்பு, மன்னிப்பு மற்றும் ஒப்புரவு வாழ்வை வாழ்வது விசுவாசத்தின் மூலக்கூறில் இருக்கின்றது. போர்களும், போர்கள் குறித்த வதந்திகளும் இடம்பெறும் இக்காலத்தில் இந்தத் திருத்தந்தை அன்பையும், மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டு வருவார். புதிய திருத்தந்தை யூதர்களுடன் வலுவான உறவையும், முஸ்லீம்களுடன் உரையாடல் மேற்கொள்வதற்கான திறந்த மனத்தையும் கொண்டுள்ளார் என்றும் அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர் Chris Smith கூறினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்செயலர் சார்பாக இத்திருப்பலியில் பங்கெடுத்த FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் Jose’ Graziano da Silva, ஐ.நா.நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழைகளின் நண்பராகப் பார்க்கிறது என்றும், பசி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, கடும் ஏழ்மை ஆகியவைகளை அகற்றுவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு இவர் ஆதரவாக இருப்பார் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.