2013-03-19 16:11:43

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்பு திருப்பலி


மார்ச்,19,2013. மார்ச் 19, புனித வளன் திருவிழா. இயேசுவையும், தாய் மரியாவையும் பராமரித்துவந்த திருக்குடும்பத் தலைவரான புனித வளன் கத்தோலிக்கத் திருஅவையின் பாதுகாவலர். இப்புனிதரின் விழாவான இந்தப் புனித நாளில் உலகின் 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்ற திருப்பலி, உரோம் நேரம் காலை 9 மணி 30 நிமிடங்களுக்கு ஆரம்பமானது. அப்போது இந்திய நேரம் பிற்பகல் 2 மணியாகும். அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், அரசர்கள், அரசிகள், ஆளுனர்கள், அரசுகளின் பிரதிநிதிகள், யூதம், இசுலாம் உட்பட பல்சமயப் பிரதிநிதிகள், பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என 130 நாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ், இச்செவ்வாயன்று முதல் நிகழ்ச்சியாக, உரோம் நேரம் காலை 7.30 மணிக்கு அர்ஜென்டினா நாட்டு Buenos Aires பேராலய அதிபர் அருள்திரு Alejandro Russoவுடன் தொலைபேசியில் பேசினார். அந்நேரத்தில் அப்பேராலய வளாகத்தில் விசுவாசிகள்கூடி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்துக் கொண்டிருந்தனர். திருத்தந்தையின் இத்தொலைபேசி அழைப்பு அங்கு கூடியிருந்த அனைவருக்கும் கேட்கும்படி சப்தமாக வைக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரலைக் கேட்டதும் அம்மக்கள் அனைவருக்கும் எல்லையில்லாத ஆனந்தம். திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் Buenos Aires உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றி வந்தார்.
இச்செவ்வாய் காலை 6.30 மணிக்கெல்லாம் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகம் விசுவாசிகளுக்குத் திறந்துவிடப்பட்டது. வத்திக்கானைச் சுற்றியுள்ள இடங்களில் பேருந்துகள் செல்லாதவண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. நகரப்பேருந்துகளும், பாதாள இரயில்களும் இலவசமாக இயக்கப்பட்டன. காலை 7.30 மணிக்கெல்லாம் வளாகம் நிறைந்துவிட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அப்பா, அக்காலத்தில் இத்தாலியின் தூரின் நகரப் பகுதியிலிருந்து அர்ஜென்டினா சென்று குடியேறியவர். எனவே இந்தத் தூரின் நகர்ப் பகுதியிலுள்ள நகர மேயர்கள், முக்கிய அரசு பிரதிநிதிகள், விசுவாசிகள் என மக்கள் பெருமளவாக வந்திருந்தனர். திருத்தந்தையின் மூதாதையரின் பூர்வீக நகரில் தற்போது பங்குக்குருவாகப் பணியாற்றும் தமிழர் அருள்திரு சலேத்தும் 100 விசுவாசிகளுடன் இத்திருப்பலியில் கலந்துகொண்டார். RealAudioMP3
இச்செவ்வாய் காலை 9.30 மணிக்குத் திருப்பலி தொடங்கவிருந்தது. அதற்கு முன்னர் 8.50 மணிக்கு, சாதாரண திருத்தந்தை உடையில் திறந்த காரில் அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பவனி வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத சிறிய கண்ணாடி வாகனத்தைப் பயன்படுத்தாமல் திறந்த காரில் மக்கள் மத்தியில் வலம் வந்தார். அச்சமயம் சிறு குழந்தைகளை வாங்கி முத்தம் கொடுத்தார். ஓரிடத்தில், எழுந்து நிற்க முடியாமல் படுத்தபடியே கிடந்த மாற்றுத்திறனாளி ஒருவரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தச்சொல்லி, அதிலிருந்து இறங்கி அவரை முத்தமிட்டு ஆசீர்வதித்தார். அதன்பின்னர் திருப்பலி ஆடையில் முதலில் பசிலிக்கா சென்று, அங்கு தூய பேதுரு கல்லறைக்குத் தூபமிட்டுச் சிறிது நேரம் செபித்தார். திருத்தந்தை அணியவிருந்த Pallium என்ற கழுத்துப்பட்டையும், மோதிரமும் அக்கல்லறைமீது வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, இருவர் தட்டுகளில் ஏந்தி வந்தனர்.
பின்னர், கர்தினால்களுடன் பவனியாக வளாகத்துக்கு வந்தார் திருத்தந்தை. பாடகர்குழு புனிதர்கள் மன்றாட்டைப் பாடிக் கொண்டிருந்தது. பேதுரு வளாகத்தில் இந்தியக் கொடி உட்பட பல நாடுகளின் கொடிகளைக் காண முடிந்தது. “போய் எனது வீட்டைச் சீர்செய்” என்று, அசிசி நகரில் திருச்சிலுவையிலிருந்து இயேசு புனித பிரான்சிசிடம் பேசிய வார்த்தைகளைக் கொண்ட விளம்பரத் துணிகளையும் வளாகத்தில் காண முடிந்தது. இத்திருப்பலியில் கலந்து கொண்ட தமிழர்களில் ஒருசிலர் வளாகத்தில் எம்மோடு பகிரிந்து கொண்டவைகளைக் கேட்போம்.
RealAudioMP3 திருப்பலியின் இறுதியில் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் பெரிய திரைகளில் இத்திருப்பலியில் கலந்துகொண்ட ஏறக்குறைய 2 இலட்சம் மக்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறக்குறைய 2 மணிநேரம் இடம்பெற்ற இத்திருப்பலிக்குப் பின்னர் கர்தினால்களுடன் பசிலிக்காவுக்குள் சென்று திருப்பலி ஆடையைக் களைந்துவிட்டு திருத்தந்தையின் வெள்ளை அங்கியை மட்டும் அணிந்தவராய், அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், அரசர்கள், அரசிகள், ஆளுனர்கள், அரசுகளின் பிரதிநிதிகள், யூதம், இசுலாம் உட்பட பல்சமயப் பிரதிநிதிகள் என முக்கியமானவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்தார். இச்சந்திப்பு, ஒரு மணி முப்பது நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. அவருக்கெனப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமராமல் நின்றுகொண்டே அனைவரையும் சந்தித்தார்.
நமது வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு இடம் ஒதுக்குவோம். ஒருவர் ஒருவர்மீது அக்கறை காட்டுவோம். படைப்பின், அன்பின் காவலர்களாக இருப்போம் என்ற முதல் டுவிட்டர் செய்தியை பகல் 11.55 மணிக்கும், உண்மையான அதிகாரம் பணிபுரிவதே. திருத்தந்தை, அனைத்து மக்களுக்கும், சிறப்பாக, ஏழைகள், பலவீனமானவர்கள், நலிந்தவர்கள் ஆகியோருக்குப் பணிபுரிய வேண்டும் என்ற இரண்டாவது டுவிட்டர் செய்தியை 12.12 மணிக்கும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையின் 266வது திருத்தந்தையாக புனித வளன் விழாவான இச்செவ்வாயன்று பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம். எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ள நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையான, தாழ்மையான வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.