2013-03-19 16:18:19

Pallium, மீனவர் மோதிரம்


மார்ச்,19,2013. திருத்தந்தையின் பணியேற்புத் திருப்பலி தொடங்கியதும், முதல் நிகழ்வாக, நல்ல ஆயருக்குரிய அடையாளமான Pallium என்ற கழுத்துப்பட்டையைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். வெள்ளைநிற கம்பளித் துணியாலான அதில், சிவப்புநிறத்தில் சிலுவைகள் தைக்கப்பட்டிருந்தன. இந்தப் Pallium நல்ல ஆயருக்குரிய அடையாளமாக இருப்பதோடு, மனித சமுதாயத்தின் மீட்புக்காகச் சிலுவையில் அறையுண்ட செம்மறியின் அடையாளமும் ஆகும். செம்மறியின் கம்பளி குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது திருத்தந்தை பணியேற்புத் திருப்பலியின் மறையுரையில் பேசியபோது (ஏப்ரல் 24,2005) செம்மறியின் கம்பளி, ஆயர் தனது தோள்களில் சுமக்கும் காணாமற்போன, நோயுற்ற அல்லது பலவீனமான ஆட்டைக் குறிக்கும், மேலும், இந்த ஆட்டை அதன் ஆயர் வாழ்வின் தண்ணீருக்குத் தூக்கிச் செல்கிறார் என்று குறிப்பிட்டார். கர்தினால்-தியாக்கோன்களில் மூத்தவரான கர்தினால் ஜான் லூயி தவ்ரான் சிறிய செபம் சொல்லி Palliumத்தைத் திருத்தந்தை பிரான்சிசின் கழுத்தில் அணிவித்தார்.
பேராயர்களும் Pallium அணிகின்றனர். இது குறுகியதாய், ஆறு கருப்புநிறச் சிலுவைகளைக் கொண்டிருக்கும். முக்கியமான விழாக்களின்போது மட்டும் பேராயர்கள் இதனை அணிவார்கள்.
தூய பேதுரு சாவியுடன் இருக்கும்வண்ணம் அமைந்திருந்த மோதிரத்தை, கர்தினால்கள் அவைத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, சிறிய செபம் சொல்லி திருத்தந்தை பிரான்சிசின் விரலில் அணிவித்தார். மீனவர் மோதிரம் எனப்படும் இது, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மோதிரமாகும்.







All the contents on this site are copyrighted ©.