2013-03-18 16:09:01

திருஅவையில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் முக்கியத்துவம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு - டில்லி பேராயர் Anil Couto


மார்ச்,18,2013. எளிமையானதோர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவார் என தான் எதிர்பார்ப்பதாக டில்லி பேராயர் Anil Couto கூறினார்.
இந்தியத் திருஅவை திருத்தந்தையை இந்திய நாட்டுக்கு வருகை தருமாறு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று கூறிய பேராயர் Couto, தற்போது நிகழ்ந்த 'கான்கிளேவ்' அவையில்தான் முதன்முறையாக ஐந்து இந்திய கர்தினால்கள் கலந்துகொண்டனர் என்பதையும் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
வருகிற ஜூன் மாதம் 29ம் தேதி திருத்தூதர்கள் புனித பேதுரு, பவுல் பெருவிழாவன்று புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராயர் Couto, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் 'Pallium' எனப்படும் தலைமைப்பணி பட்டையைப் பெறுவார்.
மேலும், மதங்களுக்கு இடையே உரையாடலை வளர்ப்பதிலும், பிறரன்பு சேவைகளிலும் சிறந்த ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம், புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமகிழ்வு கொண்டுள்ளனர் என்று Vasai ஆயர் Felix Machado கூறினார்.
புதியத் திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து தன்னை அழைத்து பாராட்டியது ஒரு இந்தமதத் தலைவர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Machado, நல்லதொரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென இந்துக்களும் வேண்டி வந்துள்ளனர் என்பதை அத்தலைவர் கூறியபோது தான் மகிழ்வடைந்ததாக எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.