2013-03-18 16:02:58

உரோமை ஆயராக தன் பணியை திருத்தந்தை துவங்கும் வைபவம்


மார்ச்,18,2013. உரோமை ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் தன் பணியைத் துவங்கும் வைபவம் இச்செவ்வாய்க்கிழமை காலை உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு திருப்பலியுடன் இடம்பெறும்.
திருப்பலிக்கு முன்னர் திறந்த வாகனம் ஒன்றில் தூய பேதுரு வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ், பின்னர் தூய பேதுரு ஆலயத்தினுள் சென்று திருப்பலிக்கான உடைகளை அணிந்து முதலில் தூய பேதுரு கல்லறையை தரிசித்தபின்னர் அங்கிருந்தே ஊர்வலமாக பசிலிக்காப் பேராலய முகப்பிற்கு வருவார்.
‘திருத்தந்தையாக முடிசூட்டும் விழா’ என அழைக்கப்பட்டு வந்த இந்த வைபவம், தற்போது 'உரோமை ஆயர் பணியை துவக்கி வைக்கும் திருப்பலி விழா’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இத்திருப்பலியில் திருத்தந்தையின் அதிகாரத்தைக் குறிக்கும் பாலியம் எனும் கழுத்துப்பட்டையை கர்தினால் ஜான் லூயி தவுரான் அளிக்க, அதே வேளை கர்தினால் அவைத்தலைவர் கர்தினால் சொதானோ, திருத்தந்தை பிரான்சிஸிடம் திருத்தந்தை அணியும் மோதிரத்தை வழங்குவார். ரிக்கோ மன்ஃபிரினி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கலைஞரால் இந்த வெள்ளி மோதிரம் தங்கமுலாம் பூசப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தூய பேதுருவின் மோதிரம் என்ற பொருளுடன் இது மீனவரின் மோதிரம் என அழைக்கப்படுகிறது.
உரோம் நகரில் தற்போது தங்கியிருக்கும் அனைத்து கர்தினால்களும், முதுபெரும் தலைவர்களும் திருத்தந்தையுடன் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றுவர். இது தவிர, பிரான்சிஸ்கன் துறவு சபையின் தலைவரும் இயேசு சபை அதிபரும் திருத்தந்தையுடன் இணைந்து திருப்பலியை நிறைவேற்றுவர். பெரும்பான்மை எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட துறவு சபைகள் கூட்டமைப்பின் தலைவராக பிரான்சிஸ்கன் துறவுசபை தலைவரும் துணைத்தலைவராக இயேசு சபை தலைவரும் தற்போது பணியாற்றி வருவதே இதற்கு காரணமாகும்.
இச்செவ்வாய்க்கிழமை வைபவத்தில் கர்தினால்-ஆயர்கள் சார்பில் இருவர், கர்தினால்-குருக்கள் சார்பில் இருவர் மற்றும் கர்தினால்-தியாக்கோன்கள் சார்பில் இருவர் என 6 கர்தினால்கள், அனைத்து கர்தினால்களின் பிரதிநிதிகளாக திருத்தந்தைக்கு தங்கள் கீழ்ப்படிதலை அறிவிப்பர்.
இத்திருப்பலியில் பங்குபெறும் விசுவாசிகளுக்கு என 500 தியாக்கோன்கள் திருநற்கருணை வழங்குவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பலிக்குப்பின் தூய பேதுரு பேராலயத்தினுள் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பார்.







All the contents on this site are copyrighted ©.