2013-03-17 14:48:41

திருத்தந்தை பிரான்சிஸ் : நம் ஆண்டவர் மன்னிப்பதில் ஒருபொழுதும் களைப்படைவதில்லை


மார்ச்.17,2013. தவக்காலத்தின் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், விபசாரத்தில் பிடிபட்ட பெண் குறித்தும், இயேசு அப்பெண்ணைத் தண்டனையிலிருந்து காப்பாற்றியது குறித்தும் பேசுகிறது. இயேசுவின் எண்ணங்களை நாம் எடுத்துக் கொள்வோம். வெறுப்பு, கண்டனம் போன்ற வார்த்தைகளைக் கேட்காமல், மனமாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும் அன்பு, கருணை ஆகிய சொற்களை மட்டும் கேட்போம். இறைவனின் முகம் கருணைநிறை தந்தையின் முகம். அவர் எப்போதும் பொறுமையாக இருப்பவர். இறைவனின் பொறுமை குறித்தும், அவர் நம் ஒவ்வொருவர் மீது கொண்டுள்ள பொறுமை குறித்தும் சிந்தித்தீர்களா என்று கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் மன்னிப்பதில் ஒருபொழுதும் களைப்படைவதில்லை. நாம்தான் மன்னிப்புக் கேட்பதில் களைப்படைகிறோம். அவர் அன்பும் கருணையும் உள்ளவர். எனவே நாமும் மன்னிப்பு கேட்பதில் ஒருபொழுதும் களைப்படையாதிருப்போம் என்றும் கூறினார். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கருணை அனைத்தையும் மாற்றும். சிறிதளவு கருணை, இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்ததாக மாற்றும் என்று கர்தினால் காஸ்பர் கூறியுள்ளதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இவ்வுரைக்குப் பின்னர் நாம் அனைவரும் சேர்ந்து மூவேளை செபத்தைச் செபிப்போம் என்று சொல்லி அச்செபத்தை இலத்தீனில் செபித்த்தார். பின்னர் அனைவருக்கும் ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதன்பின்னர் மூவேளை செப உரைக்கு வந்திருந்த அனைத்து மக்களின் வரவேற்புக்கும் செபத்துக்கும் நன்றி சொன்னார். தனக்காகவும் செபிக்குமாறு கேட்டார். அனைத்து சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக இவ்வேளையில் ஒன்றித்திருக்கும் அனைவருக்கும், உரோம், இத்தாலி மற்றும் உலகினர் அனைவருக்கும் தனது அன்பை மீண்டும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார். தான் பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்ததன் காரணத்தையும் விளக்கினார். உங்கள் அனைவருக்கும் தெரிந்தது போல, எனது குடும்பம் இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டது, இந்த மண்ணின் ஆன்மீகத்தோடு தனக்குள்ள தொடர்பினால் இப்பெயரைத் தெரிவு செய்ததாகக் கூறினார். தற்போது இயேசு அவரின் திருஅவை என்ற குடும்பத்தை ஏற்பதற்கு என்னை அழைத்துள்ளார். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்னைமரியா உங்களைப் பாதுகாப்பாராக. இறைவன் மன்னிப்பதில் ஒருபொழுதும் களைப்படைவதில்லை. நாம்தான் மன்னிப்புக் கேட்பதில் களைப்படைகிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்று சொல்லி மக்களிடமிருந்து விடை பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.