2013-03-16 16:48:45

கல்தேயமுறை முதுபெரும் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், “உண்மையான” அரபு வசந்தத்தின் நம்பிக்கையாக இருக்கிறார்


மார்ச்,16,2013. அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சியைச் சந்தித்துள்ள கல்தேயமுறை திருஅவை, மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிசின் தேர்தல் முக்கியமான நிகழ்வாக இருக்கின்றது என்று ஈராக்கின் கல்தேயமுறை முதுபெரும் தலைவர் பேராயர் லூயிஸ் முதலாம் இரபேல் சாக்கோ கூறினார்.
திருத்தந்தை பிரான்சிசின் சான்று பகரும் வாழ்வு, அரபு நாடுகளில் வாழும் மக்களை குளிர்காலத்திலிருந்து உண்மையான வசந்தத்திற்கு வழிநடத்திச் செல்லும் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் கூறினார்.
திருத்தந்தை, தனது தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கடந்த காலத்தில் இராணுவ சர்வாதிகார வன்முறை ஆட்சி உட்பட, வன்முறையையும் கடின வாழ்வையும் அனுபவித்துள்ளார் என்பதால், மாற்றத்தில் நம்பிக்கை வைப்பதற்கு இவரால் மக்களை ஊக்கப்படுத்த முடியும் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் கூறினார்.
அர்ஜென்டினா நாட்டவரான இவரது தேர்தல் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றும், இக்கட்டான நிலையிலுள்ள திருஅவையை நடத்திச் செல்வதற்குத் தூயஆவி இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.