2013-03-16 16:43:49

1054ம் ஆண்டுக்குப் பின்னர் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர், திருத்தந்தையின் பணியேற்புத் திருப்பலியில் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளார்


மார்ச்,16,2013. கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் கலந்து கொள்வார் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்த 1054ம் ஆண்டுக்குப் பின்னர், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர் ஒருவர், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் கலந்து கொள்ளவிருப்பது இதுவே முதன் முறையாக இருக்கும் என்றும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
உரோமன் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையேயான உரையாடல் அவையின் துணைத் தலைவர் Ioannis Zizioulas, அர்ஜென்டினா ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் Tarassios இத்தாலியின் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் Gennadios உட்பட ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவுடன், வத்திக்கானில் இடம்பெறவிருக்கின்ற வருகிற செவ்வாய் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காலத்தில் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையேயான உரையாடல் முழுவீச்சுடன் இடம்பெறத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.