2013-03-15 16:37:21

திருத்தந்தை பிரான்சிஸ் : முதுமையின் ஞானத்தை இளையோருக்கு வழங்க வேண்டும்


மார்ச்,15,2013. தனது பணியையும் கர்தினால்கள் அனைவரையும் திருஅவையின் அன்னையாகிய மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணிக்கின்றேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வெள்ளியன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கர்தினால்களையும் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையின் அன்னையாகிய மரியாவின் பரிந்துரை மூலம் உயிர்த்த கிறிஸ்துவின் முகத்தைத் தியானிப்போம் என்று கூறினார்.
நாம் அனைவரும் செபத்தில் நிலைத்திருந்து, அன்னைமரியாவின் மகனின் குரலுக்குச் செவிசாய்த்து, நம் ஆண்டவரின் பிரசன்னத்துக்குச் சாட்சிகளாக இருப்போம் என்றும் கர்தினால்களிடம் கூறினார் திருத்தந்தை.
இங்குள்ள நம்மில் பாதிப்பேர் வயதானவர்கள், முதுமை வாழ்வு ஞானத்தின் இருப்பிடம் என்று சொல்வது எனக்குப் பிடிக்கும், எருசலேம் ஆலயத்தில் இயேசுவைச் சந்தித்த வயதான சிமியோன், அன்னா போன்று, வயதானவர்கள், வாழ்வில் தாங்கள் நடந்துவந்த பாதையில் ஞானத்தைப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞானம், வயதோடு பக்குவம் அடையும் நல்ல திராட்சை இரசத்தைப் போன்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு ஜெர்மானியக் கவிஞர் சொன்னது போன்று, வயதான காலம், அமைதி மற்றும் செபத்தின் காலம், முதியவர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை இளையோருக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் முடிவில் ஒவ்வொரு கர்தினாலும் தனித்தனியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முத்தமிட்டு வாழ்த்தினர்.







All the contents on this site are copyrighted ©.