2013-03-14 16:55:40

மார்ச் 19, புனித யோசேப்புப் பெருவிழாவின்போது புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பொறுப்பேற்கிறார்


மார்ச்,14,2013. புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் மார்ச் 19, வருகிற செவ்வாயன்று கொண்டாடப்படும் புனித யோசேப்புப் பெருவிழாவின்போது தலைமைப் பொறுப்பேற்கும் திருப்பலியை நிறைவேற்றுவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடுத்த சில நாட்கள் நிகழ்வுகளை வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
இவ்வியாழன் காலை 8 மணியளவில் உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்று செபம் செய்த திருத்தந்தை, மாலை 5 மணிக்கு சிஸ்டின் சிற்றாலயத்தில் ஏனைய கர்தினால்கள் அனைவருடனும் திருப்பலியை நிறைவேற்றினார்.
இவ்வெள்ளியன்று காலை கர்தினால்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடும் திருத்தந்தை, சனிக்கிழமையன்று ஊடகத் துறையினர் அனைவரையும் திருத்தந்தை 6 பவுல் மன்றத்தில் காலை 11 மணிக்குச் சந்திப்பார்.
மார்ச் 17, வருகிற ஞாயிறன்று மதியம் திருத்தந்தையின் மூவேளை செப உரை வழக்கமான இடத்தில் நடைபெறும்.
மார்ச் 19, காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியில், தலைமைப் பொறுப்பைக் குறிக்கும் 'பாலியம்' திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்படும்.
மார்ச் 20, வருகிற புதனன்று வழக்கமாக நடைபெறும் புதன் பொது மறைபோதகத்திற்குப் பதில், கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்கும் வகையில், பல்வேறு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை திருத்தந்தை சந்திப்பார்.








All the contents on this site are copyrighted ©.