2013-03-14 16:52:34

புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,14,2013. திருஅவையின் 266வது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வியாழன் காலை 8 மணி அளவில் உரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்குச் சென்று அரை மணி நேரம் செபத்தில் மூழ்கினார்.
இயேசு சபையை நிறுவிய புனித லயோலா இஞ்ஞாசியார் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டபின் தன் முதல் திருப்பலியை ஆற்றிய பீடம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அமைந்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் இந்த பீடத்திற்கு அருகிலும் சில மணித்துளிகள் செபத்தில் ஈடுபட்டார்.
திருத்தந்தையர் உரோம் நகருக்குள் செல்லும்போது வழக்கமாகச் செல்லும் பல வாகனங்கள் அடங்கிய ஊர்வலம் ஏதுமில்லாமல், திருத்தந்தையர் பயன்படுத்தும் சிறப்பு வாகனத்தையும் பயன்படுத்தாமல், திருத்தந்தை பிரான்சிஸ் வேறு ஒரு சாதாரண வாகனத்தையே பயன்படுத்தினார்.
தனிப்பட்ட முறையில் அமைந்த இந்த பயணத்தில், திருத்தந்தை இல்லத்தின் நிர்வாகி பேராயர் George Gaenswein அவர்களும், உதவி நிர்வாகி பேரருள் தந்தை Leonardo Sapienza அவர்களும் மட்டுமே உடன் சென்றனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தப் பயணம் அமைந்திருந்தும், பசிலிக்காவின் முன்பக்கத்தில் மக்கள் கூடியிருந்தனர் என்றும், திருத்தந்தை பேராலயத்தின் முன்புறம் அமைந்திருந்த பள்ளியின் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கையசைத்தபடியே சென்றார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.