2013-03-14 17:04:37

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், நமக்குச் சிறந்ததோர் வழிகாட்டி கிடைத்துள்ளார் - இந்தியத் திருஅவை


மார்ச்,14,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், நமக்குச் சிறந்ததோர் வழிகாட்டி கிடைத்துள்ளார், இந்தியத் திருஅவை மகிழ்வில் நிறைந்துள்ளது என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் பேராயர் Albert D'Souza கூறினார்.
ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகைப்படம் தாங்கிய செய்திகள் ஏறத்தாழ அனைத்து செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் பதிவாகியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இயேசு சபையைச் சார்ந்த ஒரு துறவி, பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றிருப்பது மிக அழகான ஒரு வெளிப்பாடு, தூய ஆவியாரின் வழிகள் புதுமையானவை என்றும், புனித பிரான்சிஸ் காட்டிய எளிமை வழிகளை மேற்கொள்ளும் திருத்தந்தை திருஅவையில் நல்ல மாற்றங்களைக் கொணர முடியும் என்று தென் கொரியாவின் ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
கடந்த ஈராண்டுகள் போரில் மூழ்கியிருக்கும் சிரியாவுக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவ்வப்போது விடுத்த செய்திகள் நம்பிக்கையைத் தந்ததுபோல், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமும் அமைதிச் செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று தமஸ்குவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவின்போது நமக்குக் கிடைத்துள்ள புதியத் திருத்தந்தை, அகில உலகத் திருஅவையை புதிய வழிகளில் நடத்துவார் என்ற நம்பிக்கையை வெளியிட்ட, மனித உரிமை ஆர்வலர் இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash, அமைதிக்கும் நீதிக்கும் உழைக்கும் ஒரு திருத்தந்தை கிடைத்துள்ளார் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.