2013-03-13 16:19:46

புதியத் தொடர்புக் கருவிகள் வழியே தகவல்களை அறிந்துகொள்ளும் அனுபவத்தைவிட, புகை, ஆலய மணி ஆகிய அடையாளங்கள் தரும் அனுபவம் நிறைவானது


மார்ச்,13,2013. கணணி அடிப்படையில் வளர்ந்துள்ள பல்வேறு தொடர்பு பரிமாற்றங்களில் திருஅவை வளர்ந்திருந்தாலும், புதியத் திருத்தந்தையின் தேர்வு அறிவிப்பையொட்டி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வழிகளைப் பயன்படுத்துவதையே திருஅவை இன்னும் விரும்புகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் Federico Lombardi செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட, அண்மையத் திருத்தந்தையர்கள் மற்றும் திருஅவை தலைவர்கள் பலரும் Facebook, Twitter ஆகிய வழிகளைப் பயன்படுத்தினாலும், புதியத் திருத்தந்தை தேர்வின் முடிவை அறிய கருப்பு அல்லது வெள்ளைப் புகை என்ற அடையாளங்களையே திருஅவை இன்னும் விரும்புகிறது என்று அருள் தந்தை Lombardi கூறினார்.
புதியத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, வெள்ளைப் புகை வெளிவரும் நேரத்திற்கும், அவர் யார் என்பதை மக்கள் தெரிந்துகொள்வதற்கும் இடையே ஏறத்தாழ 45 நிமிடங்கள் கடக்கும் என்பதையும் கூறிய அருள்தந்தை Lombardi, அந்த 45 நிமிடங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியுள்ள மக்கள் ஒன்றாக இணைந்து அடையும் அனுபவம், உடனடித் தொடர்புகள் மூலம் குலையாமல் அமைவதும் ஒருவித அழகு என்று எடுத்துரைத்தார்.
வெளி வரும் புகை கருப்பா, வெள்ளையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுவதால், வெள்ளைப் புகை வெளிவரும்போது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மணிகளும் ஒலிக்கும் என்று தெளிவுபடுத்திய அருள்தந்தை Lombardi, நமது புதியத் தொடர்பு கருவிகள் வழியே தகவல்களை அறிந்துகொள்ளும் அனுபவத்தைவிட, புகை, ஆலய மணி ஆகிய அடையாளங்கள் தரும் அனுபவம் நிறைவானது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.