2013-03-13 16:24:27

பாகிஸ்தான் லாகூரில் Sant'Egidio பிறரன்பு அமைப்பினர் ஈடுபட்டுள்ள துயர் துடைப்புப் பணிகள்


மார்ச்,13,2013. பாகிஸ்தான் லாகூரில் உள்ள புனித யோசேப்பு கிறிஸ்தவ காலனியின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள Sant'Egidio பிறரன்பு அமைப்பினர் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வன்முறை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னர் இக்குடும்பங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால், உயிர்ச் சேதம் ஏதுமின்றி இவர்கள் தப்பித்தனர் என்றும், இருப்பினும் இவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் என்றும் Sant'Egidio அமைப்பினர் கூறினர்.
பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே எளிய தொழிலாளிகள் என்றும், இந்த வன்முறைகளால் அச்சத்திற்குள்ளாகி இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவது மிகவும் அவசியம் என்றும் இவ்வமைப்பினர் எடுத்துரைத்தனர்.
தங்கள் வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இழந்து தவிக்கும் இவர்களுடன் அனைத்து கிறிஸ்தவ உலகும் செபத்தில் ஒன்றியிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தாங்கள் வழங்கி வருவதாக Sant'Egidio அமைப்பினர் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.