2013-03-13 21:42:06

திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் இயேசு சபை கர்தினால் Jorge Mario Bergoglio


மார்ச்,13,2013. 2013ம் ஆண்டு, மார்ச் 13, புதன் இரவு 8.12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் Jean-Louis Tauran “நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம்” என்று அறிவித்தார்.
திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் கர்தினால் Jorge Mario Bergoglio, முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுள்ளார்.
1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Argentina நாட்டின் Buenos Aires நகரில் பிறந்தவர் Jorge Mario Bergoglio. ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர். Jorge வேதியில் துறையில் பட்டம் பெற்றபின், 1958ம் ஆண்டு தனது 22வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
தத்துவ இயலிலும், மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், Buenos Airesல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1969ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Jorge, 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு முடிய Argentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1992ம் ஆண்டு Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001ம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார்.முதல் முறையாக, தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயேசு சபையின் ஆண்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இயேசு சபை துறவி இந்நிலையை அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.