2013-03-13 16:20:02

கான்கிளேவ், சில தகவல்கள்


மார்ச்,13,2013 RealAudioMP3 . உலகின் ஏறக்குறைய 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவரான திருத்தந்தையின் தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையின் இரண்டாவது நாளாகிய இப்புதன் காலை 10 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் மழையில் குடைகளைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அனைவரது கண்களும் சிஸ்டின் சிற்றாலயத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ள புகைப்போக்கியை நோக்கியபடியே இருந்தன. 11.45 மணிக்கு இலேசாக கரும்புகை வெளிவரத் தொடங்கியது. பின்னர் கரும்புகை அடர்த்தியாகவே வந்தது. புதிய திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினர். ஏனெனில் கரும்புகை வெளிவந்தால் திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அர்த்தம். வெண்புகை வெளிவந்தால் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று அர்த்தம். வெண்புகை வெளியே தெரியும் நேரத்தில் வத்திக்கான் பேதுரு பசிலிக்கா மணிகளும் ஒலிக்கத் தொடங்கும். ஏனெனில் காலநிலையில் புகையின் நிறம் தெளிவாகத் தெரியாமல் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கவே வத்திக்கான் பேதுரு பசிலிக்கா மணிகளும் ஒலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கான்கிளேவ் அவை நடக்கும் நாள்களில் காலையில் 2 வாக்குப் பதிவுகள், மாலையில் 2 வாக்குப் பதிவுகள் என தினமும் 4 வாக்குப் பதிவுகள் முதல் மூன்று நாள்களுக்கு நடக்கும். இந்நாள்களில் தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் புகை வெளிவரும். இதற்கிடையில், திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் இந்த மணி நேரங்களுக்கு முன்னதாகவே வெண்புகை வெளியே வரும்.

இச்செவ்வாய் மாலையிலும் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையில் குடைகளுடன் காத்து நின்றனர். ஏனெனில் அன்று மாலை சிஸ்டின் சிற்றாலயத்தின் முதல் வாக்குப்பதிவு இடம்பெற்றது. மாலை 7.42 மணிக்கு கரும்புகை வெளியே வந்ததும், திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை எனச் சொல்லிக்கொண்டே அப்புகையை இரசித்துக் கொண்டு அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். பல நாடுகளின் கொடிகளையும் காண முடிந்தது. திருத்தந்தை இல்லாமல் வத்திக்கான் நன்றாகவே இல்லை. அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென பலர் சொல்லிக் கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது.

கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றின் 75வது கான்கிளேவ், இந்த 21ம் நூற்றாண்டின் 2வது கான்கிளேவ், இச்செவ்வாய் மாலை 3.45 மணிக்கு வத்திக்கானில் தொடங்கியது. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கத் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்ட 115 கர்தினால்கள் பவ்லின் சிற்றாலயத்தில் செபச் சூழலில் கூடியிருக்க, மாலை 4.15 மணிக்கு, கர்தினால்-ஆயர்களில் மூத்தவராகிய கர்தினால் Giovanni Battista Re சிறிய செபத்தின் மூலம் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

“கிறிஸ்துவின் அன்பிலும், பொறுமையிலும் நமது இதயங்களை வழிநடத்தும் ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக”

என்று சொல்லி சிலுவை வரைந்து, சிஸ்டின் சிற்றாலயத்தை நோக்கிய பவனியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். பின்னர்,

“மதிப்புக்குரிய சகோதரர்களே, திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் இப்பொழுது நாம் உரோமன் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கான்கிளேவில் நுழையவிருக்கிறோம். கிறிஸ்துவின் மந்தையை மேய்ப்பதற்குத் தகுதியான ஒருவரை நம் மத்தியிலிருந்து தேர்ந்தெடுப்பதற்காக, அகிலத் திருஅவையும் தூயஆவியின் அருளுக்காகத் தொடர்ந்து வேண்டுதல் செய்து நம்மோடு செபத்தில் இணைந்துள்ளது. நம் ஆண்டவர் உண்மையின் பாதையில் நம்மை வழிநடத்துவாராக. இதன்மூலம், புனித கன்னிமரியா, திருத்தூதர்கள் பேதுரு, பவுல், அனைத்துப் புனிதர்கள் ஆகியோரின் பரிந்துரையால், நம் ஆண்டவருக்கு விருப்பமானதையே நாம் எப்பொழுதும் செய்வோமாக”.

கர்தினால் ரே இவ்வாறு செபித்த பின்னர் புனிதர்களின் பிரார்த்தனையுடன் பவனி தொடங்கியது. திருச்சிலுவை முன்னே செல்ல, அதற்குப் பின்னே சிஸ்டின் பாடகர் குழு, சிஸ்டின் சிற்றாலயத்தில் தியானம் கொடுத்த, இத்தேர்தலில் ஓட்டுப்போடாத 80 வயதுக்கு மேற்பட்ட கர்தினால் Prospero Grech, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருட்திரு குய்தோ மரினி, கான்கிளேவுக்குத் தலைமை தாங்கும் கர்தினாலின் செயலர், உரோமன் ரோட்டாவிலிருந்து இருவர் என ஒரு சிறிய குழுவினர் செல்ல, அவர்களைத் தொடர்ந்து 115 கர்தினால்களும் சென்றனர். புனிதர்களின் பிரார்த்தனையைப் பாடிக்கொண்டே சென்ற இந்த பவனியினரை, சிஸ்டின் சிற்றாலயத்தின் முகப்பில், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Ganswein, பாப்பிறைத் திருப்பூட்டு அறையை மேற்பார்வையிடுபவர், ஒப்புரவு திருவருள்சாதனங்களுக்குப் பொறுப்பானவர், திருத்தந்தையின் மெய்க்காப்பாளர் குழுவின் தலைவர் Daniel Rudolf Anrig, அவ்வாலயத்தைக் காக்கும் மெய்க்காப்பாளர்கள் ஆகியோர் வரவேற்றனர். 115 கர்தினால்களும் அவ்வாலயத்தில் நுழைந்து அவரவர் இருக்கைகளுக்குச் செல்லும்வரை புனிதர்களின் மன்றாட்டு பாடப்பட்டது.

கர்தினால்கள் ஒவ்வொருவரும் அவரவருக்குக் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளுக்குச் சென்றனர். கர்தினால்-ஆயர்கள், கர்தினால்-குருக்கள், கர்தினால்-தியாக்கோன்கள் என்ற வரிசையில் கர்தினால்களின் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இவை cherry மரத்தாலானவை. தூயஆவியிடம் வேண்டுதல்புரியும் “Veni Creator Spiritus” பாடல் பாடப்பட்டது. இதன் பின்னர் கர்தினால் ரே, கான்கிளேவ் குறித்த இரகசியத்தைக் காக்கும் உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் அனைவரும் எடுப்பதற்கு அழைப்பு விடுத்தார். அனைவரும் சேர்ந்து இலத்தீனில் இந்த உறுதி மொழியை எடுத்தனர்.

உரோமன் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் பங்குகொள்ளவிருக்கும் வாக்காளர் கர்தினால்களாகிய நாங்கள், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் 1996ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வெளியிடப்பட்ட 'Universi Dominici Gregis' என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் கண்மூடித்தனமாகவும் பிரமாணிக்கத்துடனும் கடைப்பிடிப்பதாக தனியாகவும் குழுவாகவும் உறுதி கூறுகிறோம், சத்தியபிரமாணம் செய்கிறோம், உறுதி மொழி எடுக்கிறோம். அதேபோல், இறைவனருளால் எங்களில் ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அகிலத் திருஅவையின் மேய்ப்பராக 'munus Petrinum' இப்பணியை பிரமாணிக்கத்துடன் செய்வதற்குத் தன்னை அர்ப்பணிப்பதாகவும் சத்தியபிரமாணம் செய்கிறோம். திருப்பீடத்தின் ஆன்மீக மற்றும் உலகியல் சார்ந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஊக்கத்துடன் பாதுகாக்கத் தவறமாட்டேன் எனவும் உறுதி கூறுகிறோம். இங்கு நடக்கும் அனைத்தையும் இரகசியம் காப்போம் .....

48 நாடுகளைச் சேர்ந்த இந்த வாக்காளர் கர்தினால்கள் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்த பின்னர், அவ்வாலயத்தின் நடுவில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் நற்செய்தி நூலில் ஒவ்வொருவராக வந்து தங்களது வலது கையை அதன்மீது வைத்து உறுதி மொழி எடுத்தனர். கர்தினாலாகிய நான் சத்தியபிரமாணம் செய்கிறேன், உறுதி மொழி எடுக்கிறேன். எனவே இறைவா, எனக்கு உதவும். எனது கரத்தால் தொடும் இந்த நற்செய்தியும் எனக்கு உதவட்டும். இவ்வாறு உறுதிமொழி கொடுத்தவர்களில் இந்திய, இலங்கைக் கர்தினால்களின் குரல்களைக் கேட்போம்.

அனைவரும் உறுதிமொழி கொடுத்த பின்னர் பேரருட்திரு குய்தோ மரினி “Extra omnes” என்று சொல்ல கான்கிளேவுக்குத் தொடர்பில்லாத அனைவரும் வெளியேறினர். பேரருட்திரு மரினி அவ்வாலயக் கதவை மூடினார். அப்போது செவ்வாய் மாலை 5.35 மணியாகும்.

அதன்பின்னர் அகுஸ்தீன் சபை கர்தினால் Prosper Grech தியானச் சிந்தனைகளை வழங்கினார். அது முடிந்ததும் பேரருட்திரு குய்தோ மரினியும், கர்தினால் Grechம் வெளியேறினர். கர்தினால்களில் இளையவராகிய கேரளாவின் 53 வயதான கர்தினால் கிளீமிஸ் சிஸ்டின் சிற்றாலயக் கதவை மூடினார். சிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருந்த பின்னர் கர்தினால் ரே வாக்குப் பதிவை தொடங்கலாமா எனக் கேட்க அனைவரும் ஆம் என்று சொன்னதும் முதல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒவ்வொரு கர்தினால்களிடமும் 12செ.மீ. அகலம், 14 செ.மீ நீளமுடைய 2 அல்லது 3 வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இத்தகைய நடைமுறை, 1198ம் ஆண்டு திருத்தந்தை 3ம் இன்னோசென்ட்டின் தேர்தலின்போது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதே வடிவத் தாள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வக வடிவிலான இந்தச் சீட்டின் மேலே, Eligo Summum Pontificem அதாவது திருத்தந்தையாக நான் தேர்ந்தெடுப்பவர் என இலத்தீனில் எழுதப்பட்டிருக்கும். கீழே ஒரு கோடு இருக்கும். அதில் பெயரை எழுதி, வாக்குத்தாளை இரண்டாக மடித்து, அங்குள்ள திருப்பலிப்பீடத்தின்மீது வாக்குகளைச் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் மூன்று கிண்ணங்களில், முதல் பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவராக வந்து போடுவர். இதில் பெயர் எழுதும்போது வழக்கமான கையெழுத்தாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேணடும். ஏனெனில் யார் எழுதியது என்பதைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. இரண்டாவது கிண்ணம், உடல்நலமின்றி யாரும் வெளியே இருந்தால் அவர்களிடம் சென்று வாங்கி வரும் வாக்குகளைப் போடுவதற்குரியது. மூன்றாவது கிண்ணம், வாக்குகளைச் சரிபார்த்துப் போடுவதற்குரியது. புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவருக்கு 77 வாக்குகள் தேவை.

புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கான்கிளேவில் மூத்தவராக இருப்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை திருஅவையின் விதிமுறைகளின்படி ஏற்கிறீரா என்று கேட்பார். அவர் ஆம் என்று சொன்னதும், கர்தினால்கள் ஒவ்வொருவராக வந்து அவரிடம் தங்களது மதிப்பயும் மரியாதையையும் பணிவையும் தெரிவிப்பர். பின்னர் நன்றிச் செபம் சொல்லப்படும். பின்னர் அவர் திருத்தந்தையாக அகிலத் திருஅவைக்கும் அறிவிக்கப்படுவார். கர்தினால்-தியோக்கோன்களில் மூத்தவராக இருக்கும் கர்தினால் Jean-Louis Pierre Tauran, வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்கும் மக்களிடம், Nunzio Vobis Gaudium Magnum (I announce a great joy to you all) நான் உங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியை அறிவிக்கப் போகிறேன் என்று முதலில் சொல்லி, ”Habemus Papam”(We have a Pope) அதாவது நமக்கு ஒரு திருத்தந்தை கிடைத்துவிட்டார் எனச் சொல்வார். புதிய திருத்தந்தைக்கு 3 அளவிலான உடுப்புகள் “Stanza delle Lacrime” என்ற அறையில் தயாராக உள்ளன. பதியவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர் அழுத அல்லது வருத்தமடைந்த வரலாறு இருப்பதால் இந்த அறைக்கு இந்தப் பெயர் உள்ளது. புதிய திருத்தந்தை பவுலின் சிற்றாலயம் சென்று சிறிது நேரம் செபித்த பின்னர் வத்திக்காந் பசிலிக்காவின் முகப்புக்கு வந்து விசுவாசிகளை வாழ்த்தி தனது ஊருக்கும் உலகுக்குமான “Urbi et Orbi” ஆசீரை வழங்குவார். வழக்கமாக இந்த ஆசீர், கிறிஸ்மஸ் மற்றும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நாள்களிலே திருத்தந்தை வழங்குவது வழக்கம்.

புதிய திருத்தந்தைக்காகத் தொடர்ந்து நாம் செபித்துக் கொண்டிருப்போம்.








All the contents on this site are copyrighted ©.