2013-03-13 16:07:17

கற்றனைத்தூறும்... கர்தினால் பணிவழிப் பிரிவுகள்


80 வயதுக்குட்பட்டவர்களே திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் கலந்துகொள்ளதகுதியுடையவர்கள் எனினும், வயது வேறுபாடின்றி அனைவரும் இணைந்த அவையே கர்தினால்கள் அவை என அழைக்கப்படுகிறது. கர்தினால்கள் மேற்கொள்ளும் பணியினையொட்டி அவர்களை மூன்று பிரிவுகளாகக் காண்கிறது திருஅவை. அவையாவன: கர்தினால்-ஆயர்கள், கர்தினால்-குருக்கள் மற்றும் கர்தினால்- தியாக்கோன்கள். தற்போதைய வாக்குப்பதிவில் கலந்துகொள்வோரில் நால்வரே கர்தினால் ஆயர்கள். பொதுவாக கர்தினால்கள் அவையின் தலைவர், உதவித் தலைவர், மற்றும் கீழைமுறைகளின் முதுபெரும் தலைவர்கள், மூத்த கர்தினால்கள், கர்தினால் ஆயர்களாக இருப்பர். கர்தினால் குருக்கள் என்பவர்கள், பொதுவாக மறைமாவட்டங்களை நேரடியாக நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த மற்றும் இருக்கும் கர்தினால்கள் ஆவர். கர்தினால் தியோக்கோன்கள் என்பவர்கள், திருஅவையின் தலைமைப்பீடத்தில் பணிபுரிவோராக இருப்பர். இவ்வாறு பணிபுரிபவர்களுக்குள்ளும் கர்தினால் குருக்களும் ஆயர்களும் உண்டு. திருத்தந்தையால் கௌரவிக்கப்படும் விதமாக கர்தினாலாக உயர்த்தப்படும் இறையியலாளர் மற்றும் ஏனைய குருக்களும்கூட கர்தினால் தியாக்கோன்கள் என்றே அழைக்கப்படுவர்.
கர்தினால் என்ற பட்டம் மத்திய காலம்வரை, முக்கிய கோவில்களின் குருக்களுக்கு வழங்கப்பட்டது, எடுத்துக்காட்டாக கான்ஸ்டான்நோபிள், மிலான், ரவேனா, நேப்பிள்ஸ் கொலோன் போன்ற முக்கிய கோவிலகளின் குருக்களுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. உரோம் நகரிலும் ஏறத்தாழ 25 முதல் 28 பங்குத்தளங்களின் குருக்களுக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. இவை, பங்குத்தளங்களாக அல்ல, ஏறத்தாழ மறைமாவட்டங்கள் போலவே செயல்பட்டன. ஏனெனில் இவை உரோமை ஆயரின்கீழ் இருந்தவை, அதாவது திருத்தந்தையின்கீழ் இருந்தவை. இதன் குருக்கள், கர்தினால்- குருக்கள் என அழைக்கப்பட்டனர். இது தவிர, உரோம் மறைமாவட்டம், ஏழைகளுக்கான நேரடிப் பணியின்பொருட்டு ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தியோக்கோன்கள் நியமிக்கப்பட்டனர். மற்றும் திருத்தந்தையின் இல்ல நிர்வாக பொறுப்பிற்கெனவும் 7 தியோக்கோன்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 14 பேரும் கர்தினால்-தியோக்கோன்கள் என அழைக்கப்பட்டனர்.
திருஅவை வளர வளர, புதிய ஆயர்களின் திருநிலைப்பாட்டினை, தன் மறைமாவட்டத்திற்கு அருகிலுள்ள ஆயர்கள் நிறைவேற்றும்படி திருத்தந்தை கேட்டுக்கொண்டதுடன், அவர்களை அழைத்து ஆலோசனைகளையும் கேட்டார். இவர்கள் உரோம் நகரைச் சுற்றியிருந்த ஏழு ஆயர்கள் ஆவர். இவர்களே புனித பேதுரு பசிலிக்காவிலும் இலாத்ரன் பசிலிக்காவிலும் ஆடம்பரத் திருப்பலியை அக்காலத்தில் நிறைவேற்ற முடியும். இந்த எழுவருமே கர்தினால்-ஆயர்கள் என அழைக்கப்பட்டனர். இப்படித்தான் ஆதிகாலத் திருஅவையில் கர்தினால்-குருக்கள், கர்தினால்-தியாக்கோன்கள் கர்தினால்-ஆயர்கள் என்ற படிநிலை உருவானது என வரலாறு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.