2013-03-12 16:12:02

கர்தினால் சொதானோ : திருஅவையின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்


மார்ச்,12,2013. பிறரன்பின் உன்னதப் பணியைத் தாராள உள்ளத்துடன் செய்யக்கூடிய ஒரு திருத்தந்தையை நம் ஆண்டவர் நமக்கு அருளுமாறு செபிப்போம் என, கர்தினால் ஆஞ்சலோ சொதானோ கூறினார்.
அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெறும் "pro eligendo pontifice" என்ற திருப்பலியை இச்செவ்வாய் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அனைத்துக் கர்தினால்களுடன் இணைந்து நிகழ்த்தி மறையுரையாற்றிய, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் சொதானோ இவ்வாறு கூறினார்.
பிறரன்பின் உன்னதப் பணியை உலக அளவில் சோர்வின்றி தொடர்ந்து செய்யும் வருங்காலத் திருத்தந்தைக்காகச் செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் சொதானோ, தனது மந்தைக்காக தனது வாழ்வைக் கொடுப்பதே ஒவ்வோர் ஆயரின் அடிப்படைப் பண்பாகும் என்றும் கூறினார்.
அன்பின் செய்தி, ஒற்றுமையின் செய்தி, திருத்தந்தையின் பணி ஆகிய மூன்று தலைப்புக்களில் இத்திருப்பலியின் வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய கர்தினால் சொதானோ, புதிய திருத்தந்தைமீது நாம் காட்ட வேண்டிய அன்பு குறித்தும் விளக்கினார்.
மக்களுக்காகவும் அனைத்துலக சமூகத்துக்காகவும் நீதியையும் அமைதியையும் சோர்வின்றி ஊக்குவித்து, பல நல்ல முயற்சிகளைக் கட்டி எழுப்புவர்களாக முன்னாள் திருத்தந்தையர் இருந்தனர் என்பதையும் குறிப்பிட்ட அவர், பேதுருவின் வழிவந்தவராகிய 265வது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சிறந்த பாப்பிறை பணிக்காக நன்றி தெரிவிப்போம் என்றும் கூறினார்.
பிறரன்பின் மாபெரும் பணி நற்செய்தி அறிவித்தல் என்றும், திருஅவையின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் கர்தினால் சொதானோ கேட்டுக்கொண்டார்
கான்கிளேவ் அவை குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு 5,600 ஊடகவியலாளர் திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வழிவருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை, இச்செவ்வாய் மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது.







All the contents on this site are copyrighted ©.