2013-03-11 15:17:21

கர்தினால்களின் கான்கிளேவ் அவை இச்செவ்வாயன்று துவங்குகிறது


மார்ச்,11, 2013. புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கர்தினால்களின் கான்கிளேவ் அவை மார்ச், 12, இச்செவ்வாயன்று காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழும் திருப்பலியுடன் துவங்குகிறது.
இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 30 நிமிடங்களுக்குத் துவங்கும் இத்திருப்பலியில், கர்தினால்கள் அவை தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ தலைமையில் அனைத்து கர்தினால்களும் கலந்துகொள்வர்.
இச்செவ்வாய் மாலை உள்ளூர் நேரம் 4 மணி 30 நிமிடங்களுக்கு 80 வயதிற்குட்பட்ட 115 கர்தினால்களும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி செபம் மற்றும் தியானத்தில் ஈடுபட்டபின்னர் வாக்குப்பதிவிலும் கலந்துகொள்வர். இதற்கு முன்னதாக, கர்தினால்களுக்கு தியானச் சிந்தனைகளை அகுஸ்தீன் துறவு சபைக் கர்தினால் Prospero Grech வழங்குவார்.
இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 115 கர்தினால்களுள் 28 இத்தாலியர்கள் உட்பட 60 பேர் ஐரோப்பியர்கள்; 19 பேர் இலத்தீன் அமெரிக்கர்கள்; 14 பேர் வட அமெரிக்கர்கள்; 11 பேர் ஆப்ரிக்கர்கள்; 5 இந்தியர்கள், ஓர் இலங்கையர் உட்பட 10 பேர் ஆசியர்கள்; ஒருவர் ஓசியானியாவைச் சேர்ந்தவர்.
இதில் பங்கெடுக்கும் கர்தினால்களின் சராசரி வயது 71. இந்த 115 கர்தினால்களுள் 67 பேர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள்.







All the contents on this site are copyrighted ©.