2013-03-09 15:31:10

தவக்காலம் - 4வது ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 வாருங்கள், வத்திக்கானை விட்டு வெளியேறுவோம். ஆம், அன்புள்ளங்களே, தவக்காலம் துவங்கியதிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக நம் ஞாயிறு சிந்தனைகள் வத்திக்கானைச் சுற்றியே வலம் வந்துள்ளன. இன்று தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு. இன்று நாம் வத்திக்கானை விட்டு வெளியேறுவோம். இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக பிப்ரவரி 11ம் தேதி அறிவித்தது, கடந்த 600 ஆண்டுகளாக யாரும் கண்டிராத ஒரு நிகழ்வு என்பதால், அதைப் புரிந்துகொள்ள முயன்றோம். இந்த முடிவைத் தொடர்ந்து, அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க செய்யப்பட்டுவரும் ஏற்பாடுகளையும், அவற்றில் நமது பங்கு என்ன என்பதையும் கடந்த மூன்று வாரங்களாக சிந்தித்தோம். இந்த சிந்தனைகள், என்னையும் சேர்த்து, பலருக்கு புதியத் தகவல்களாக இருந்தன.
இத்தகவல்கள் நம் அறிவுக்கு மட்டும் உணவாக மாறாமல், நம் மனங்களில் திருஅவைமீது ஓர் ஈடுபாட்டையும், நம்பிக்கையும் வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டோம். இந்த நம்பிக்கையை நமது சிந்தனைகள் வளர்த்திருந்தால், இறைவனுக்கு நன்றி.
இதே நம்பிக்கையுடன் நம் செபங்களைத் தொடர்வோம். வருகிற செவ்வாயன்று (மார்ச் 12) துவங்கவிருக்கும் 'கான்கிளேவ்' அவையில் பங்கேற்கும் நமது கர்தினால்கள், வெளி உலக மதிப்பீடுகள், எண்ணங்கள் ஆகியவற்றால் வழிநடத்தப்படாமல், தூய அவியாரின் வழிநடத்துதலுக்கு தங்கள் உள்ளங்களைத் திறக்க வேண்டும் என்று செபிப்பது மட்டுமே இனி நாம் செய்ய வேண்டியது. அதற்குப் பதிலாக, 'கான்கிளேவ்' அவையில் என்ன நடக்கும், யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பனபோன்ற ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களில் நாம் மூழ்கினால், வத்திக்கானைச் சுற்றி வட்டமடித்துவரும் ஊடகக் கழுகுகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். எனவே, இறை ஆவியாரின் மீது நம் பாரத்தைப் போட்டுவிட்டு, நாம் வத்திக்கானைவிட்டு வெளியேறுவோம். இது முதல் காரணம்.
இரண்டாவது காரணம்... இந்த ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள், அதிலும் சிறப்பாக, இன்றைய நற்செய்தியில் நாம் காணும் உலகப் புகழ்பெற்ற 'காணாமற்போன மகன்' உவமை, நம் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தர காத்திருக்கின்றன. எனவே, இவற்றில் நமது கவனத்தைச் செலுத்த நாம் வத்திக்கான் விவகாரங்களைவிட்டு வெளியேறுவோம்.

தவக்காலத்தின் 4ம் ஞாயிறு Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரண்டு காரணங்களை இன்றைய இரு வாசகங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது அடையும் மகிழ்வு பெரிதா? அல்லது, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது அடையும் மகிழ்வு பெரிதா? இதை ஒரு பட்டிமன்றமாக நடத்த நான் இப்போது தயாராக இல்லை. வாழ்வில் நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் விளக்குகின்றன இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும். யோசுவா நூலில் நாம் காணும் வரிகள், விடுதலையும், தன்னிறைவும் அடைந்த எந்த ஒரு சமுதாயமும் பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள்:
யோசுவா 5: 9-12
அந்நாள்களில், ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். இஸ்ரயேலர்... எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்... கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
எகிப்தில் அடிமைகளாக பல தலைமுறைகள் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள், உண்ணும் உணவு, உண்ணும் நேரம், உண்ணும் அளவு என்ற அனைத்திற்கும் எகிப்தியர்கள் முன் கைகட்டி நின்றவர்கள். இப்போது அவர்கள் தங்கள் உரிமையாகக் கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் தங்கள் விருப்பப்படி உண்டனர் என்பதை இவ்வாசகம் கூறுகிறது.
கானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் இதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தாயரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் இதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை இந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.
இழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும் உலக அளவில் மிக அதிகப் புகழ்பெற்ற உவமை 'ஊதாரிப் பிள்ளை' என்று வழங்கப்படும் 'காணாமற்போன மகன்' உவமை. யோசுவா நூலில் நாம் வாசித்த பகுதியையும், காணாமற்போன மகன் உவமையையும் இன்றைய உலக நிலவரங்களுடன் இணைத்து சிந்திக்க முயல்வோம்.
இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாய் அனுபவித்த பல கொடுமைகளின் உச்சகட்டமான கொடுமை, உணவு தொடர்பாக அவர்கள் அடைந்த அவமானங்கள். உணவு என்பது, வெறும் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு மட்டும் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் அல்ல. மனிதருக்கு மரியாதை தரும் ஒரு செயல். அந்த மரியாதை மறுக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு உணவு மட்டும் உண்பது என்ற சூழல் மனிதர்களை மிருகங்களைப் போல் தாழ்த்தும் ஓர் அவலம். இந்தக் கொடுமை, உலகின் பல நாடுகளில், பல வடிவங்களில் இன்றும் மனிதர்கள் மீது திணிக்கப்படுகிறது. பசி, வறுமை, போர் ஆகிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, வீட்டையும், நாட்டையும் இழந்து, முகாம்களில் துன்புறும் பல கோடி மக்களை இப்போது மனதில் ஏந்தி மன்றாடுவோம். உணவை ஓர் அரசியல் பகடைக்காயாக மாற்றி ஆதாயம் தேடும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கி, மனிதர்கள் மதிப்புடன் உணவு உண்ணும் வழிமுறைகள் உலகில் வளரவேண்டும் என்று மன்றாடுவோம்.

‘காணாமற்போன மகன்’ உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, மடைதிறந்த வெள்ளமென பல பிரச்சனைகள் மனதைச் சூழ்கின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்றை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை உதவும். இலக்கியத்தில் நொபெல் பரிசை வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway எழுதிய The Capital of the world என்ற சிறுகதையில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம் இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும் Paco என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிகிறது. வீட்டைவிட்டு வெளியேறிய Pacoவைத் தேடி அலைகிறார் தந்தை. இறுதியில் அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடுகிறார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிடுகிறார்:
“PACO, MEET ME AT THE HOTEL MONTANA. NOON TUESDAY. ALL IS FORGIVEN. PAPA” "Paco, Montana ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா." என்ற விளம்பரத்தை அவர் வெளியிட்டார்.

செவ்வாய் மதியம் அப்பா Montana ஹோட்டலுக்குச் சென்றபோது, அங்கு அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுபடுத்த காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது. Paco என்பது ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே Paco என்ற பெயர் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவருமே அப்பாவுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்களனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து அங்கு காத்திருந்தார்கள்" என்று Hemingway தன் சிறுகதையை முடித்துள்ளார். இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது நகரங்களில் எத்தனையோ இளையோர் இதே நிலையில் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
'ஊதாரிப் பிள்ளை' அல்லது 'காணாமற்போன மகன்' என்ற தலைப்பில் இந்த உவமை சொல்லப்பட்டிருப்பதால், தந்தை-மகன் உறவில் மட்டுமே பிரச்சனைகள் எழுகின்றன என்று அர்த்தமல்ல. பொதுவாகவே குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால் காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம் ஒப்புரவின் காலம் என்பதை நாம் அறிவோம். நம் குடும்பங்களில், அல்லது நமக்குத் தெரிந்தவர்கள் மத்தியில் பிளவுபட்டிருக்கும் உறவுகள் ஒப்புரவாக வேண்டுமென மன்றாடுவோம்.

உறவு முறிவு மட்டுமே காணாமற் போவதற்குக் காரணமல்ல என்பதை நமது உலகம் தினமும் தன் செய்திகள் வழியை உணர்த்திவருகிறது.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமற்போனவர்கள், போரின் போது காணாமற்போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமற் போனோரை அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பது நான்கு நாட்களுக்குமுன் BBCல் நாம் வாசித்த ஒரு செய்தியின் பகுதி.

போர்ச்சூழல், கடத்தல் போன்ற கொடிய காரணங்கள் ஏதுமின்றி காணமற்போகும் பலரும் உண்டு. சில மாதங்களுக்கு முன் NDTVயில் வந்த ஒரு செய்தி இது: "சிவம் சிங் (Shivam Singh) என்ற 13 வயது சிறுவன் மாலையில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். திடீரென எழுந்து, ‘அம்மா, நான் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கிட்டு வந்து, பிறகு வீட்டுப்பாடம் செய்கிறேன் என்று கூறியபடி, தாயின் அனுமதிக்குக் கூடக் காத்திருக்காமல் போனவன்தான்... இன்னும் திரும்பவில்லை. இது நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சிவம் சிங் திறந்தபடியே விட்டுச்சென்ற பாடப் புத்தகங்களை அதே இடத்தில் காத்து வருகின்றனர் பெற்றோர். அப்புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது" என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிவம் கடைக்குப் போன வழியில் ஒரு விபத்தில் தன் உயிரை இழந்தான் என்ற செய்தியை இந்தப் பெற்றோர் கேட்டிருந்தாலும் பரவாயில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மரணம் ஒரு பயங்கர இழப்பு என்றாலும், மகனுக்கு என்ன ஆயிற்று என்பதையாவது அந்தப் பெற்றோர் அறிந்திருப்பர். இப்போதோ, எவ்விதத் தகவலும் இல்லாமல், ஆறு மாதங்களாய் இவர்கள் அனுபவிக்கும் நரக வேதனை மிகக் கொடியது.

எவ்விதக் காரணமும் இல்லாமல் காணாமற்போனவர்கள் என்ற கொடுமையில் வாடும் கோடான கோடி மக்கள் என்ற கடலில் ஒரே ஒரு துளிதான் இது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் 50,000க்கும் அதிகமான குழந்தைகள் எவ்விதத் தடயமும் இன்றி காணாமல் போகின்றனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்றும் கேள்விப்படுகிறோம்.
தற்போது (பிப்ரவரி 25 - மார்ச் 22) ஜெனீவாவில் நடைபெற்று வரும் 22வது ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வெள்ளிக்கிழமை வெளியான ஒரு தகவலின்படி, பாலியல் வர்த்தகத்திற்கென பல இலட்சம் சிறுமியரையும், இளம் பெண்களையும் கடத்தி, விலை பேசும் கும்பல்கள் 136 நாடுகளில் உள்ளன என்று தெரியவந்துள்ளது.
இவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குடும்பத்தில் வேதனை நிறைந்த வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு காணாமற்போன உறவுகள்.
அக்களிக்கும் ஞாயிறு என்ற எண்ணத்துடன் ஆரம்பமான நமது சிந்தனைகள் உலகின் பல்வேறு கொடியச் சூழல்களால் வருத்தத்தில் தோய்ந்துள்ளன. இருப்பினும், இக்கொடுமைகள் இறைவனின் அருளால் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்போம்.








All the contents on this site are copyrighted ©.