2013-03-09 15:45:30

கான்கிளேவ் குறித்த சில விபரங்கள்


மார்ச்,09,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வழிவருபவரின் தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கும்.
இந்தக் கான்கிளேவ் அவையில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர், மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்குப் பெற்றிருக்க வேண்டும். அதாவது தற்போதைய எண்ணிக்கையின்படி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவருக்கு 77 வாக்குகள் தேவை.
இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 115 கர்தினால்களுள் 28 இத்தாலியர்கள் உட்பட 60 பேர் ஐரோப்பியர்கள். 19 பேர் இலத்தீன் அமெரிக்காவையும், 14 பேர் வட அமெரிக்காவையும், 11 பேர் ஆப்ரிக்காவையும், 5 இந்தியர்கள், ஓர் இலங்கையர் உட்பட 10 பேர் ஆசியாவையும், ஒருவர் ஓசியானியாவையும் சார்ந்தவர்கள்.
இதில் பங்கெடுக்கும் கர்தினால்களின் சராசரி வயது 71. இந்த 115 கர்தினால்களுள் 67 பேர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள்.
20ம் நூற்றாண்டில் 8 கான்கிளேவ் அவைகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் 3 மட்டுமே 3 நாள்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில், 1830க்கும் 1831ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாள்கள் நடைபெற்ற கான்கிளேவ்தான் நீண்ட நாள்கள் நடைபெற்றதாகும். திருத்தந்தை 16ம் கிரகரியின் தேர்தலின் போது 83 வாக்குப் பதிவுகள், 50 நாள்களுக்கு நடைபெற்றன. 20ம் நூற்றாண்டில் மிகக் குறுகிய கான்கிளேவ் 1939ம் ஆண்டில் நடைபெற்றதாகும். இதில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் 3 வாக்குப் பதிவுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.