2013-03-08 15:22:42

வருகிற வாரத்தில் கான்கிளேவ் அவை தொடங்கக் கூடும்


மார்ச்,08,2013. அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற கர்தினால்கள் அவை வருகிற வாரத்தில் தொடங்கக்கூடும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் இவ்வெள்ளி காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கர்தினால்களின் பொது அமர்வு குறித்து இவ்வெள்ளி பிற்பகல் ஒரு மணியளவில் நிருபர்களுக்கு விளக்கிய அருள்தந்தை லொம்பார்தி இதனைத் தெரிவித்தார்.
கான்கிளேவில் கலந்து கொள்ளவிருக்கும் 115 கர்தினால்கள் உட்பட மொத்தம் 153 கர்தினால்கள் இவ்வெள்ளி காலை பொது அமர்வில் கலந்து கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
கான்கிளேவ் அவைக்கு முன்தயாரிப்பாக நடைபெற்றுவரும் இப்பொது அவையில் 18 கர்தினால்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர் எனவும், கடந்த திங்கள் முதல் இடம்பெற்றுவரும் இப்பொது அமர்வுகளில் இதுவரை 100 கர்தினால்கள் பேசியுள்ளனர் எனவும் அருள்தந்தை லொம்பார்தி நிருபர்களிடம் தெரிவித்தார்.
அனைத்துலக மகளிர் தினம், பல்சமய உரையாடல், இன்றைய உலகில் நீதி, அறநெறி விழுமியங்கள், இறையன்பையும் இறைஇரக்கத்தையும் அறிவித்தல் போன்ற தலைப்புக்களில் கர்தினால்கள் இவ்வெள்ளிக்கிழமை காலை பொது அமர்வில் பேசினர் எனவும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.