2013-03-08 15:35:45

அனைத்துலக மகளிர் தினத்துக்கு ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி


மார்ச்,08,2013. அனைத்துலக மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் நாம் அனைவரும், மகளிருக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறைகளை முற்றிலும் ஒழிப்பதற்குச் செயலில் இறங்குவோம் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 08, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இடங்களிலுள்ள பெண்கள் குறித்துச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியுள்ளார்.
மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து ஐ.நா.வில் பெரிய அளவில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுவருவதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், அனைத்து அரசுகளும், குழுக்களும் தனிநபர்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
மேலும், அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவை வடிவமைப்பதிலும், எல்லா முற்போக்கு அமைப்புக்களிலும் பெண்களின் பங்கு மகத்தானது. சமநீதி, சமத்துவம் என எல்லாத் துறைகளிலும், பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் துணையாக நின்று உறுதியளிப்போம் என்றார்.







All the contents on this site are copyrighted ©.