2013-03-06 15:29:41

வன்முறையற்ற நேர்மையான முறையில் நாட்டின் தேர்தல்கள் நடைபெறவேண்டும் - பானமா ஆயர்கள்


மார்ச்,06,2013. மறைமுகச் செயல்பாடுகள் அற்ற, வன்முறையற்ற நீதியான, அமைதியான முறையில் பானமா நாட்டின் தேர்தல்கள் நடைபெறவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒளிவு மறைவும், வன்முறையும் இல்லாத வழிகளைப் பின்பற்றுவோம் என்ற வாக்குறுதி ஒன்றை வேட்பாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழு இந்த வாக்குறுதியைத் தாயரித்து, வெளியிட்டுள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் இந்த அறிக்கையில் மார்ச் 6, இப்புதன்கிழமைக்குள் கையெழுத்திட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்த அறிக்கையில் கையெழுத்திடாத வேட்பாளர்களைப் புறக்கணிக்குமாறு பானமா பேராயர் José Domingo Ulloa மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் நேர்மையான முறையில் செயல்படவேண்டும் என்றும், வன்முறைகளைத் தூண்டும் கருத்துக்களைப் பரப்புவதைத் தடுக்கவேண்டும் என்றும் பேராயர் Ulloa சிறப்பு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஆயர் பேரவை வெளியிட்ட இந்த வாக்குறுதியில் தற்போது ஆளும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதுவரை கையெழுத்திடவில்லை என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.