2013-03-05 14:39:54

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 4


RealAudioMP3 “All characters and events in this novel are purely fictitious… Any resemblance with either dead or living is purely co-incidental”
இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பது நம் கதைகளில் முன்னுரையாக நாம் காணும் ஓர் அறிக்கை. இத்தகைய ஓர் அறிக்கையை 'நல்ல சமாரியர்' உவமைக்கு முன்னுரையாகச் சொல்லமுடியுமா என்று சிந்தித்தேன். இயேசுவோ, நற்செய்தியாளர் லூக்காவோ இந்த உவமைக்கு முன்னுரையாக அறிக்கை எழுதியிருந்தால், அது பின்வருமாறு அமைந்திருக்கும் என்று எண்ணுகிறேன்:
"இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. ஒவ்வொரு நாளும் உலகின் பல இடங்களில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள் இவை. இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நாம் அனைவருமே" என்ற முன்னறிவிப்பே இக்கதைக்குப் பொருத்தமாக இருக்கும்.

'நல்ல சமாரியர்' உவமையை வாசிக்கும்போது, நம் வாழ்வின் வெவ்வேறு நேரங்களில் இக்கதாப்பத்திரங்களின் நிலையில் நாம் இருந்திருக்கிறோம் என்ற உணர்வு எழுகிறது. எனவேதான் இந்த உவமை 20 நூற்றாண்டுகளைத் தாண்டி, இன்னும் அர்த்தமுள்ள ஓர் உவமையாக உள்ளது. இத்தனை நூற்றாண்டுகளாக இந்த உவமை அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று சொல்லும்போது, அக்கண்ணோட்டத்தில் ஓர் ஆபத்து மறைந்திருப்பதையும் நாம் உணரவேண்டும்.
அதாவது, இந்த உவமை எல்லாக்காலத்தினருக்கும், அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும் ஓர் ஆன்மீகக் கதையாக மட்டுமே கருதப்படும் ஆபத்து உள்ளது. பொதுவாகவே, விவிலியத்தில் நாம் காணும் அனைத்து பகுதிகளுக்கும் உள்ள ஆபத்து இது. விவிலிய வரிகளை எல்லா காலங்களுக்கும் ஏற்ற, உலகளாவிய வகையில் சிந்திப்பதில் என்ன ஆபத்து என்று கேள்வி எழலாம். இந்த வரிகள் சொல்லப்பட்டச் சூழல், அப்போதையக் கலாச்சாரக் கூறுகள், வரலாற்றுச் சுவடுகள், அரசியல் பின்னணிகள் ஆகிய அனைத்திலுமிருந்து விவிலிய வார்த்தைகளை முற்றிலும் பிரித்தெடுத்து, ஓர் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் மட்டும் காணும்போது, அப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள முதல் நிலை அர்த்தத்தை இழக்கும் ஆபத்து உள்ளது.

எந்த ஒரு விவிலியப் பகுதியையும் இரு நிலைகளில் சிந்திப்பது நல்லது. அப்பகுதி சொல்லப்பட்டச் சூழலில் அவ்வரிகள் தரும் பொருள். அதே பகுதி இன்றைய நம் சூழலில் கற்றுத்தரும் பொருள் என்ற இரு நிலைகளில் நாம் சிந்திப்பது நல்லது. வரலாற்றுச் சூழல்களையெல்லாம் விட்டு பிரித்தெடுக்கப்பட்ட ஓர் ஆன்மீகக் கதையாக மட்டும் மாறும் ஆபத்து 'நல்ல சமாரியர்' உவமைக்கு மிக அதிகமாக இருக்கிறது. எனவே, நம் தேடலில் இந்த உவமையை, அதன் வரலாற்றுச் சூழலுடன் பொருத்திப் பார்க்க முதலில் முயல்வோம். கடந்த இரு வாரங்களாக நம் தேடல்களில் இந்த முயற்சிகளையே நாம் மேற்கொண்டோம். இன்றும் தொடர்வோம்.

இயேசுவுக்கும், திருச்சட்ட அறிஞருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைச் சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். நிலைவாழ்வை அடையும் வழி என்ன என்ற கேள்வியைக் கேட்ட அறிஞரிடம் இயேசு, திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” (லூக்கா 10: 26) என்ற பதில் கேள்வியைக் கேட்டார். இயேசுவின் கேள்விக்கு இணைச்சட்டம், லேவியர் ஆகிய இருநூல்களில், வெவ்வேறுச் சூழல்களில் கூறப்பட்ட இரு சட்டங்களை இணைத்து அறிஞர் பதில் தந்தார். அந்த பதில் மிகவும் பொருத்தமான, உன்னதமான பதில் என்பதை இயேசு உணர்ந்து, சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் (10:28) என்று அறிஞரைப் பாராட்டினார்.

இயேசுவின் இந்த ஆசீரோடு அறிஞர் திருப்தி அடையவில்லை. ஏனெனில், அவரது உள்நோக்கம் வேறு விதமாக இருந்தது. அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். என லூக்கா நற்செய்தி (10:29) கூறுகிறது. அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, என்று கூறப்பட்டுள்ள இந்த வார்த்தைகளைச் சிறிது ஆழமாக அலசுவது, இந்த உவமையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இயேசுவுக்கும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல உரையாடல்களில் - அவற்றை நாம் மோதல்கள் என்றும் சிந்திக்கலாம் - இதுவும் ஒன்று. இவ்வகை மோதல்கள் நற்செய்திகளில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. (மாற்கு 2:1 - 3:6; மத். 23; லூக்கா 7:36-50) இந்த மோதல்களின் முக்கிய அம்சங்களை நாம் அலசினால், சில உண்மைகள் புலப்படும்.
பரிசேயர்கள், சதுசேயர்கள், குருக்கள், திருச்சட்ட அறிஞர்கள் என்ற பல பிரிவினரும் மக்கள் முன்னிலையில் மட்டுமே இயேசுவிடம் விவாதங்களை மேற்கொண்டனர். நிக்கதேம் என்ற பரிசேயர் மட்டுமே இயேசுவைத் தனியேச் சந்தித்து, தன் வாழ்வுக்குத் தேவையான உண்மைகளை அறிய விரும்பினார். அந்தச் சந்திப்பும் இரவில் நிகழ்ந்ததென்று யோவான் நற்செய்தியில் (3:1-21) காண்கிறோம். ஏனையத் தலைவர்கள் அனைவருமே மக்கள் முன்னிலையில் மட்டுமே தங்கள் விவாதங்களை மேற்கொண்டனர்.
இந்த மோதல்களைப் பற்றி இங்கு நாம் சிந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. மதத்தலைவர்கள், தங்கள் பெருமையையும், நேர்மையையும் மக்கள் முன் பறைசாற்றவே இந்த மோதல்களைப் பயன்படுத்தினரே தவிர, இதனால் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்ற குறிக்கோள் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை, அவர்களுக்குத் தெரியாத உண்மைகள் இல்லை என்ற மமதையில் எழுந்த மோதல்கள் இவை.
ஆனால், இயேசுவோ இந்த மோதல்கள் அனைத்திலும் அவர்களுக்கு அளித்த பதில்கள் மூலம் மக்களுக்கு ஆழமான உண்மைகளைக் கூறினார். அவரது எண்ணமெல்லாம் மக்களை மையப்படுத்தியதாக இருந்தது. அந்த மதத் தலைவர்கள் இறைவனைப் பற்றியும், மதச்சட்டங்கள் பற்றியும் மக்கள் மனதில் விதைத்திருந்த தவறான எண்ணங்களை வேரோடு களைந்து, அங்கு நல்ல எண்ணங்களை விதைக்கவேண்டும் என்பதே இயேசுவின் குறிக்கோளாக இருந்தது.

இத்தகைய மோதல் ஒன்று திருச்சட்ட அறிஞருக்கும் இயேசுவுக்கும் இடையே எழுந்தது. நிலை வாழ்வை அடையவேண்டும் என்ற ஆவலை விட, தன் அறிவுத் திறனையும், நேர்மையையும் மக்கள் முன் பறைசாற்றவுமே திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் இந்த உரையாடலை ஆரம்பித்து வைத்தார். அவர் தன் நேர்மையை நிலைநாட்ட, இயேசுவிடம் கேட்ட அடுத்த கேள்வி: "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (10:29) மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கேள்வி ஒரு குழந்தைத் தனமான கேள்விபோல் தெரியும். 'இதுகூடத் தெரியாமல் ஒரு திருச்சட்ட அறிஞர் இருந்தாரா?' என்று எண்ணத் தோன்றும். ஆனால், ஆழச் சிந்தித்தால், அறிஞர் இந்தக் கேள்வியில் 'பொடிவைத்து' கேட்டார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இறைவன் மீதும், அடுத்திருப்பவர் மீதும் அன்பு காட்டுவதே நிலைவாழ்வுக்கு வழி என்று திருச்சட்ட அறிஞர் சொன்னதை இயேசு பாராட்டினார். அந்த பாராட்டை அறிஞர் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார். லேவியர் நூலிலிருந்து அவர் மேற்கோளாகக் கூறிய வார்த்தைகளை அலசிப் பார்த்தால், அந்த அறிஞர் பயன்படுத்தியத் துருப்புச் சீட்டின் குதர்க்கம் புரியும்.

லேவியர் நூல் 19ம் பிரிவிலிருந்து அறிஞர் ஒரு மேற்கோளை பயன்படுத்தினார். லேவியர் நூல் 19ம் பிரிவில் 18, 34 ஆகிய இரு இறைச் சொற்றொடர்களை நாம் ஒரு சேரப் பார்ப்பது நல்லது. இதோ அவ்விரு இறைச் சொற்றொடர்கள்:
லேவியர் நூல் 19: 18,34
18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!
என்று 18ம் இறைச்சொற்றோடரிலும்,
34 உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
என்று 34ம் இறைச்சொற்றோடரிலும், வாசிக்கிறோம்.
18ம் இறைச் சொற்றொடரில் கூறப்பட்ட 'அடுத்திருப்பவர்' என்ற சொல் இஸ்ரயேல் இனத்தவரைக் குறிக்கும் சொல். 34ம் இறைச்சொற்றோடரில் கூறப்பட்டுள்ள 'அடுத்திருப்பவர்' என்ற சொல் அன்னியரைக் குறிப்பது. மோசே தந்த இவ்விரு கட்டளைகளும் ஒன்று போலவே ஒலிக்கின்றன; ஒன்று போலவே கடைபிடிக்கப்பட வேண்டியவை. ஆனால், நாளடைவில் இவ்விரு கட்டளைகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளை மதத் தலைவர்கள் புகுத்திவிட்டனர்.

திருச்சட்ட நூல் அறிஞர் மோசே கட்டளைகளின் முதல் பகுதியை மட்டும் மேற்கோளாக இயேசுவிடம் கூறினார். திருச்சட்டங்களைக் கரைத்து குடித்திருந்த அவர் அந்நியரைப் பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் பகுதியைக் கூறவில்லை. தன் வசதிக்காக அவர் அதை மறந்துவிட்டாரா அல்லது மறைத்துவிட்டாரா என்பது தெளிவில்லை. ஆனால், அறிஞர் கூறிய பதிலில், 'அடுத்திருப்பவர்' என்று அவர் பயன்படுத்திய சொல்லில், அனைவரையும் இணைத்தே பேசினார் என்ற எண்ணத்தில் இயேசு அவர் சொன்ன பதிலைப் பாராட்டி, அவரை அவ்வாறே வாழும்படி சொன்னார். ஆனால், அறிஞர் தன் விவாதத்தை முடிக்க விரும்பவில்லை.
நிலை வாழ்வைப் பெறுவதற்கு நான் அன்பு செலுத்த வேண்டிய 'அடுத்திருப்பவர்' இஸ்ரயேல் இனத்தவரா அல்லது அன்னியரா என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்ற பொருள்பட இயேசுவிடம் அறிஞர் கேட்ட கேள்வியே எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்ற கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் இயேசு கூறிய ‘நல்ல சமாரியர்’ உவமையில் 'அடுத்திருப்பவர்' என்ற சொல்லுக்கு அவர் தந்த விளக்கம் அறிஞரை மட்டுமல்ல, சூழ இருந்த அனைத்து யூதர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். எவ்வகை அதிர்ச்சி இது என்பதை அடுத்தத் தேடலில் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.