2013-03-05 15:42:00

பாலியல் பாகுபாட்டுடன் நடத்தப்படும் வன்முறை ஒழிக்கப்பட ஐ.நா. அழைப்பு


மார்ச்,05,2013. உலகில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடத்தப்படும் வன்முறைகள் ஒழிக்கப்படுமாறு, பெண்கள் குறித்த ஐ.நா. ஆண்டுக் கூட்டத்தில் இத்திங்களன்று வலியுறுத்தப்பட்டது.
நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பெண்கள் அவை தொடங்கியுள்ள இரண்டு வாரக் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய ஐ.நா. உதவி பொதுச் செயலர் Jan Eliasson, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது என்பது, வாழ்வா, சாவா என்ற கேள்வியோடு தொடர்புடையது என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, போர் இடம்பெறும் பகுதிகள் உட்பட வளர்ந்த நாடுகளிலும் இடம்பெறுகின்றது என்றுரைத்த Eliasson, இவ்வன்முறை, அன்றாட வாழ்வில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதால், இதனை ஒழிப்பதற்கு எல்லா இடங்களிலும், எல்லா மட்டங்களிலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
ஐ.நா. பெண்கள் முன்னேற்றத் துறையின் கணிப்புப்படி, சில நாடுகளில் 70 விழுக்காட்டுப் பெண்கள்வரை உடல் அளவிலும் பாலியல் முறையிலும் வன்முறையை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிய வருகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், தென்னாப்ரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற நாடுகளில் தங்களின் நெருங்கிய தோழர்களால் 40 முதல் 70 விழுக்காடுவரை பெண்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.