2013-03-05 15:34:02

கான்கிளேவ் அவையின் தயாரிப்புக்காக, சிஸ்டீன் சிற்றாலயம் மூடப்படுகின்றது


மார்ச்,05,2013. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கு கர்தினால்கள் கூடவிருக்கும் சிஸ்டீன் சிற்றாலயம் இச்செவ்வாய் உரோம் நேரம் பிற்பகல் 1 மணியிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படுவதாக அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
இவ்வாலயத்தில் இரண்டு புகைக்கூண்டுகள் வைக்கப்படும், அவற்றில் ஒன்று வாக்குகளை எரிக்கவும், மற்றொன்று புகையை வெளிவிடவும் பயன்படுத்தப்படும் என, அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் அருங்காட்சியகத்திலிருக்கும் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 16ம் நூற்றாண்டிலிருந்து திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாலயத்தில், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற கான்கிளேவ் அவையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் 265வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தாலிய ஓவியர் மிக்கேல்ஆஞ்சலோவின் புகழ்பெற்ற இறுதித்தீர்ப்பு ஓவியம் உட்பட, விவிலியத்தின் தொடக்க நூலிலிருந்து 9 நிகழ்வுகள் மிக நேர்த்தியான ஓவியங்களாக சிஸ்டீன் சிற்றாலயத்தில் வரையப்பட்டுள்ளன. திருத்தந்தை 2ம் ஜூலியசின் ஆணையின் பேரில் வரையப்பட்ட இந்த ஓவியங்களைப் பார்க்க ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.