2013-03-05 11:51:35

கர்தினால்கள் அவையின் இரண்டாவது பொது அமர்வு


மார்ச்,05,2013. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது தயாரிப்புக் கூட்டம் இத்திங்கள் மாலை 5 மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்திலுள்ள ஆயர்கள் மாமன்ற அறையில் தொடங்கியது.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் கலந்துகொள்ளவிருக்கும் 115 கர்தினால்களுள் 107 பேர் இத்திங்கள் காலை அமர்விலும், மாலை அமர்வில் மேலும் 4 பேரும் கலந்து கொண்டனர் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
காலை பொது அமர்வின் தொடக்கத்தில் கர்தினால்கள் அனைவரும் வாக்குறுதி செய்தது போல, மாலை பொது அமர்வில் இந்நான்கு பேரும், திருத்தந்தையின் தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இம்மியும் பிசகாமல் இரகசியம் காப்பேன் என்று வாக்குறுதி செய்தனர் என்று அவ்வலுவலகம் மேலும் அறிவித்தது.
லெபனன் மாரனைட்முறை கர்தினால் Bechara Rai, ஜெர்மனியின் பெர்லின் கர்தினால் Rainer Maria Woelki, கொலோன் கர்தினால் Joachim Meisner, ஆப்ரிக்காவின் செனகல் நாட்டின் டாக்கர் கர்தினால் Théodore-Adrien Sarr ஆகிய நான்கு பேரும் இம்மாலை பொது அமர்வில் புதிதாக இணைந்தவர்கள் ஆவர்.
இனிவரும் நாள்களில் காலையில் மட்டுமே பொது அமர்வுகள் இருக்கும் எனவும் இத்திஙகளன்று அறிவிக்கப்பட்டது.
திருப்பீடம் தலைமையின்றி இருக்கும் நாள்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த "Universi Dominici Gregis" அப்போஸ்தலிக்க ஏட்டின்படி, இத்திங்கள் காலை பொது அமர்வில் முதல் தியானமும் கர்தினால்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனை, திருத்தந்தை இல்லத் தியானப் போதகர் கப்புச்சின் அருள்தந்தை Raniero Cantalamessa வழங்கினார்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் கலந்துகொள்ளவிருக்கும் 115 கர்தினால்களுள் 60 பேர் ஐரோப்பியர்கள்.








All the contents on this site are copyrighted ©.