2013-03-04 14:47:27

வாரம் ஓர் அலசல் – தலைமையில்லாத் திருப்பீடம் (Sede Vacante)


மார்ச்04,2013 RealAudioMP3 . கடந்த பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பீடம் தலைவரின்றி, அதாவது திருத்தந்தை இன்றி காலியாக உள்ளது. கத்தோலிக்கத் திருஅவையின் காணக்கூடிய தலைவரான திருத்தந்தை இறந்த அல்லது அவர் பதவி விலகிய நாள் முதல் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நாள்வரையுள்ள காலம் Sede Vacante அதாவது தலைமையில்லாத் திருப்பீடம் என்று சொல்லப்படுகிறது. இந்நாள்களில் திருஅவையின் தற்காலிகத் தலைவராக, Camerlengo என்ற பதவியின் தலைவர் இருப்பார். தற்போது இந்தப் பதவியில் இருப்பவர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தேனே. இவர் 2007ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் Camerlengoவாக நியமிக்கப்பட்டார்.
Sede Vacante காலம் குறித்து தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் வத்திக்கானின் இணையதளத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உருவப்படமும், அவரது விருதுவாக்கை விளக்கும் சின்னமும் தற்போது கிடையாது. அவற்றுப் பதிலாக Sede Vacante, அதாவது திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருப்பதைக் குறிக்கும் சின்னம் உள்ளது. @Pontifex என்ற முகவரியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதி வந்த டுவிட்டர் பக்கமும் மூடப்பட்டுவிட்டது. வத்திக்கான் தபால் நிலையத்தில் “Sede Vacante” என்ற வார்த்தைகளுடன் தபால்தலைகளும் விற்கப்பட்டு வருகின்றன. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகியதைக் குறிக்கும் தபால்தலைகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 455 ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைகளை வழங்கியிருக்கிறார். அவர் பதவி விலகியிருப்பதால், இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பயணிகள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா மணிகளின் சப்தத்தை மட்டுமே கேட்டுச் சென்றனர். அங்கு நின்றுகொண்டிருந்த பல பயணிகள் திருத்தந்தை இல்லாத தங்களின் கவலையைத் தெரிவித்தனர். வழக்கமான புதன் பொது மறைபோதகமும் வருகிற புதனன்று இடம்பெறாது. வழக்கமாக பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நின்றுகொண்டு திருத்தந்தையின் அறைகளில் விளக்கு எரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவ்விளக்குகளும் தற்போது எரியவில்லை. குருக்கள் தினமும் நிகழ்த்தும் திருப்பலியிலும் திருத்தந்தையின் பெயரைச் சொல்லவில்லை. திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோ இல்லத்தின் வெளிக்கதவும் மூடப்பட்டுள்ளது. இவையெல்லாமே Sede Vacanteயின் அடையாளங்கள்.
உரோம் மாநகரத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி சொல்லும் விளம்பரங்களைக் காண முடிகின்றது. கடந்த 600 ஆண்டுகளில் நடந்திராத ஒரு நிகழ்வு இந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியன்று இடம்பெற்றுள்ளது. இப்போது ஒரு வித்தியாசமான, தனித்துவமிக்க ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஏனெனில் இப்போது ஒரு திருத்தந்தையின் இறப்புக்காக யாரும் அழத் தேவையில்லை, அவரின் இறப்புக்கான எந்தத் திருவழிபாடுகளும் நடத்தத் தேவையில்லை. ஆனால் திருத்தந்தையின் பதவி காலியான பின்னர், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற கர்தினால்கள் அவையைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். கர்தினால்கள் அவைத் தலைவர், கத்தோலிக்கத் திருஅவையின் Camerlengoவாக இருக்கும் கர்தினால், அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்புச்சலுகைத் துறையின் தலைவர் கர்தினால், உரோம் மறைமாவட்டத்தின் திருத்தந்தையின் பிரதிநிதியாக இருக்கும் கர்தினால், துய பேதுரு பசிலிக்கா பேராலயத் தலைமைக்குருவான கர்தினால், வத்திக்கான் நாட்டின் முதன்மைக்குரு, முன்னாள் திருப்பீடச் செயலர், வத்திக்கான் நாட்டுக் குழுவின் முன்னாள் தலைவர், கர்தினால் Deaconல் மூத்தவர், இளையவர் ஆகியோர் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கர்தினால்களைத் தயார் செய்யும் குழுவில் இருப்பார்கள். அதன்படி, தற்போது கர்தினால்கள் அவைத் தலைவராக இருக்கும் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, கான்கிளேவ் அவைக்குத் தயாரிப்பாக, கர்தினால்களின் முதல் பொது அமர்வை இத்திங்கள் காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்திலுள்ள ஆயர்கள் மாமன்ற அறையில் கூட்டினார். இதில் அனைத்துக் கர்தினால்களும் பங்கெடுக்க வேண்டும். ஆனால் முதுமை, நோய் காரணமாக வர இயலாதவர்கள் தாங்கள் வர இயலாதது குறித்து அறிவிக்க வேண்டும். இன்று திருஅவையில் 207 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கத் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 117. தற்போதைய நிலவரத்தின்படி, இந்தோனேசியா மற்றும் ஸ்காட்லாந்து கர்தினால்கள், இதில் பங்கெடுக்க இயலாததை அறிவித்திருப்பதால், கான்கிளேவில் பங்கெடுக்கவிருப்பவர்கள் 115. திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாவதற்கு முந்திய நாள்வரை 80வது வயதைச் சிறப்பிக்காதவர்கள் கான்கிளேவில் பங்கெடுக்கலாம்.
இத்திங்களன்று தொடங்கியுள்ள கர்தினால்களின் பொது அமர்வுகள், கான்கிளேவ் அவை கூடுவதற்கான தேதியைக் குறிக்கும். இந்த அறிவிப்புக்குப் பின்னரே கான்கிளேவ் கூட்டம் நடக்கும் சிஸ்டீன் ஆலயத்தில் தயாரிப்பு வேலைகள் தொடங்கும். ஏனெனில் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த வெண்புகை அங்கிருந்துதான் வெளிவரும். எனவே வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள இந்த சிற்றாலயத்தைப் பார்ப்பதற்குப் பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கான்கிளேவ் அவைக்காகச் செபிப்பதற்காக, அடைப்பட்ட துறவு இல்லத்தைச் சார்ந்த 3 அருள்சகோதரிகள் மெக்சிகோவிலிருந்து வந்து தூய பேதுரு பசிலிக்காவில் தினமும் எட்டு மணிநேரங்கள் செபிக்கின்றனர். தூய பேதுரு பசிலிக்காவில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திருப்பலிக்கு முன்னரும், உலகெங்கிலும் இதே கருத்துக்காகச் செபிக்கப்படுகின்றது. மேலும், கான்கிளேவில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துக் கர்தினால்களும் இன்னும் உரோம் வந்து சேரவில்லை என்றும், இந்நாள்களில் வந்து சேருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பதவி, வழிவழி மரபாக வந்து கொண்டிருப்பது. கிறிஸ்தவம் இவ்வுலகில் தோன்றிய முதல் நூற்றாண்டிலிருந்து, இயேசுவின் திருத்தூதர் தூய பேதுரு தொடங்கி, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தையர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள். எனவே திருத்தந்தையர் தூய பேதுருவின் வழிமரபினர் என்றே அழைக்கப்படுகிறார்கள். இவ்வுலகில் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவரும் ஒரு பழமையான நிறுவனம் என்று திருஅவையை நாம் சொல்லலாம். இவ்வுலகின் அரசப் பரம்பரைகள் போன்று அல்லது அரசியல் போன்று அடுத்த தலைவர் யார் என்று திருஅவையில் முன்கூட்டியேச் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக, பிரிட்டன் அரசி எலிசபெத்துக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர் யார் என்பது தெரியும். அரசக் குடும்பங்களில் புதிய ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதன் வருங்காலப் பதவி சொல்லப்பட்டு விடுகிறது. ஆனால் கத்தோலிக்கத் திருஅவையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை, அதன் தலைவர் யார் என்று யூகிக்கக்கூட முடியாது. அதேபோல், புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு உலக அளவில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகவும் இருக்கின்றது. வத்திக்கானைச் சுற்றி ஊடகத்துறையினர் அமைத்துள்ள மேடைகளே இதற்கு ஒரு சான்றாக இருக்கின்றது. பல்வேறு ஊடகவியலாளர்கள் கைகளில் ஒலிவாங்கிகளையும், புகைப்படக் கருவிகளையும் வைத்துக் கொண்டு வத்திக்கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் அங்குமிங்கும் நடப்பதை இந்நாள்களில் நேரிடையாகக் காண முடிகின்றது. ஊடகத்துறையினர் மட்டுமல்ல, பல்வேறு மதத்தலைவர்களும் ஒரு புதிய திருத்தந்தையின் தேர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஒரு திருத்தந்தை இறந்தாலோ அல்லது அவர் தனது பதவியிலிருந்து விலகினாலோ அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய திருத்தந்தைக்காக, இப்படி உலகமே எதிர்பார்ப்பதற்குக் காரணம், திருத்தந்தையை இந்த உலகம் அறநெறிப் போதனைகளின் ஒளிவிளக்காக, கலங்கரை விளக்காகப் பார்ப்பது என்று சொல்லலாம். மேலும், இலட்சக்கணக்கான கத்தோலிக்கரின் ஆன்மீகத் தலைவராக இருக்கும் திருத்தந்தை, உரோம் மறைமாவட்ட ஆயருமாவார். அதனால் கடந்த பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து உரோம் மறைமாவட்டமும் ஆயரின்றி உள்ளது. அதனால்தான் உரோம் மறைமாவட்ட அதிகாரப்பூர்வ பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவுக்கும் முத்திரையிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை என்று நாம் தமிழில் சொல்வதை ஆங்கிலத்தில் Pope என்றும், இத்தாலியத்தில் Papa என்றும் சொல்கிறோம். இச்சொல், Papas என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகும். Papas என்றால் தந்தை என்று பொருள். மேலும், ஒரு திருத்தந்தை இறந்தால் அல்லது பதவி விலகினால் மட்டுமே திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் காலியாக இருக்கும். சரியான தேர்தல்முறையில் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை கத்தோலிக்கத் திருஅவையின் மத்திய நிர்வாகம் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதற்கு ஓர் அடையாளம் திருத்தந்தையின் மோதிரம் உடைக்கப்படுவது. மீனவரின் மோதிரம் என அழைக்கப்படும் இதில், இயேசுவின் திருத்தூதர்கள் அற்புதமாய் மீன் பிடித்த நிகழ்வு பொறிக்கப்பட்டிருக்கும். இது ஒரு முத்திரை மோதிரம். ஒரு திருத்தந்தை இறந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அச்சமயத்தில் அவர் அணிந்திருக்கும் மோதிரத்தை வெள்ளிச் சுத்தியலால் உடைக்கும் வழக்கம் பல காலமாக திருஅவையில் இருந்து வருகிறது. ஏனெனில் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இந்த மோதிர முத்திரையுடனேயே அக்காலத்தில் வெளியிடப்பட்டன. எனவே திருத்தந்தை இறந்த பின்னர் யாராவது இந்த மோதிரத்தைக் கொண்டு பழைய ஏடுகளில் முத்திரை குத்தி, அது திருத்தந்தையுடையது என ஏமாற்றிவிடக் கூடாது என்பதை தவிர்ப்பதற்காகவே திருத்தந்தை பயன்படுத்திய மோதிரம் அவரது பதவிக்குப் பின்னர் உடைக்கப்படுகிறது. திருத்தந்தையின் மோதிர முகப்பைச் சுற்றி அவரது பெயரும் இருக்கும். 1842ம் ஆண்டிலிருந்து அதிகாரப்பூர்வ ஏடுகளில் மோதிர முத்திரைப் பதிக்கப்படுவதில்லை. எனினும் மோதிரம் உடைக்கப்படும் பழககம் தொடர்ந்து இருந்து வருகிறது.
கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தையின் தேர்தல் அரசியல் தேர்தல் போன்றது அல்ல. மாறாக, கர்தினால்கள் நம் ஆண்டவர் இயேசுவுக்கும், தூய ஆவிக்கும் செவிசாய்த்துச் செயல்படும் நிகழ்வாகும். இது முற்றிலும் இறைவனின் தூண்டுதலால் நடப்பதாகும். எனவே இக்காலத்துக்கு ஏற்ற திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுமாறு இந்நாள்களில் நாம் செபித்துக் கொண்டிருப்போம்














All the contents on this site are copyrighted ©.