2013-03-04 14:44:46

கற்றனைத்தூறும்..... நேபாள வான் குகைகள்


நேபாளத்தின் வடமத்திய பகுதியிலுள்ள Mustang மாவட்டம், உலகின் பெரும் அகழ்வராய்ச்சி மர்மங்களை உள்ளடக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இமாலய மலைக்குள் மறைவாக அமைந்துள்ள இந்த மர்ம இடங்கள், காளி கந்தகி (Kali Gandaki) ஆற்றால் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இயற்கையான குகைகள் தவிர, மனிதரால் கட்டப்பட்ட பல சிறப்பான குகைகளும் உள்ளன. சில குகைகள் ஒரு பெரிய நுழைவாயில்துவாரத்தையும், மற்றவை பல நுழைவாயில்துவாரங்களையும் கொண்டுள்ளன. பல நுழைவாயில்களைக் கொண்ட குகைகள் எட்டு அல்லது ஒன்பது அடுக்குகளைக் கொண்டு செங்குத்தாகவும் உள்ளன. சில குகைகள் செங்குத்தான பாறைகளிலும், சில குகைகள், பாறைகளைக் குடைந்தும் அமைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் முன்னாள் Mustang முடியாட்சிப் பகுதியில் மொத்தம் பத்தாயிரம் குகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இக்குகைகளை யார், எதற்காகக் குடைந்தனர், இவற்றுக்கு மக்கள் எவ்வாறு சென்றனர் என்பன போன்ற விவரங்கள் புதிராகவே இருக்கின்றன. இவை குறித்த அனைத்துச் சான்றுகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தமத வல்லுனர்கள் மற்றும் புத்தமதக் கலைக்கு மையமாக விளங்கிய Mustang, பின்னர் 17ம் நூற்றாண்டில் இந்தியா உட்பட அதற்கு அருகிலிருந்த அரசுகள் அதை ஆக்ரமிக்கத் தொடங்கின. எனவே அங்கு பொருளாதாரத்திலும் சரிவு ஏற்பட்டது. Mustang ஆலயங்களில் நேர்த்தியான மண்டாலா(Maṇḍala) ஓவியங்களும் பெரிய சிலைகளும் அழியத் தொடங்கின. பின்னர் இப்பகுதி அனைவராலும் மறக்கப்பட்டு பெரிய இமாலய மலைகளுக்குள் மறைவான இடமாக மாறியது. மண்டாலா என்பதற்கு சமஸ்கிருதத்தில் "வட்டம்" என்று பொருள். இந்த மண்டாலா ஓவியங்கள், இந்து மற்றும் புத்த மதங்களில் ஆன்மீக மற்றும் வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. 1990களின் மத்தியில் Mustang பகுதியின் சில குகைகளுக்குச் சென்ற ஜெர்மனியின் Cologne பல்கலைக்கழக மற்றும் நேபாள ஆய்வாளர்கள், குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல மனித உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவைகளுக்கு தாமிர நகைகளும், நீள்வடிவ வண்ண கண்ணாடிப் பாசிகளும் அணிவிக்கப்பட்டு, மரக்கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தன. இந்தப் பொருட்கள் எல்லாம் முஸ்டங்கின் செழிப்பையும், அப்பகுதி வணிக மையமாகத் திகழ்ந்திருந்த வரலாற்றையும் பறைசாற்றுகின்றன. 1981ம் ஆண்டில் இக்குகைகளுக்குச் செல்ல முயற்சித்த Pete Athans, “இவற்றில் பல குகைகளை அடைவது இயலாத காரியம். அதற்கு ஒருவர் பறவையாக மாற வேண்டும்” என்று சொல்லியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.