2013-03-02 15:34:46

வத்திக்கானின் பாப்பிறை அறைகள், ஜான் இலாத்தரன் பசிலிக்கா sede vacanteக்காக முத்திரையிடப்பட்டுள்ளன


மார்ச்02,2013. திருப்பீடத்தில் திருத்தந்தையின் பதவி காலியாக இருக்கும் sede vacante காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, வத்திக்கானிலுள்ள திருத்தந்தையின் அறைக் கதவுகளை மூடி முத்திரையிட்டுள்ளார் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
Sede vacante காலத்தில் மட்டும் இயங்கும் அப்போஸ்தலிக்க அமைப்பின் தலைவரும், பாப்பிறை சார்ந்த சொத்துக்களை நிர்வகிப்பவருமான கர்தினால் பெர்த்தோனே, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரம் இரவு 8 மணிக்கு வத்திக்கானிலுள்ள திருத்தந்தையின் அறைக் கதவுகளை மூடி முத்திரையிட்டுள்ளார்.
திருத்தந்தையின் அறைகளின் நுழைவாயில் கதவைப் பூட்டி, வத்திக்கானின் முத்திரையிட்டு, கதவின் கைப்பிடிகளைச் சிவப்பு நாடாவால் கட்டியுள்ளனர். மேலும், மூன்றாவது தளத்தில் திருத்தந்தை மூவேளை செப உரை வழங்கச் செல்லும் மின்ஏற்ற மாடத்துக்கும் முத்திரையிடப்பட்டுள்ளது.
Chamberlain அல்லது Camerlengo என அழைக்கப்படும் கர்தினால் பெர்த்தோனே, புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை வத்திக்கான் நாட்டின் இடைக்காலத் தலைவராகவும், திருப்பீடச் சொத்துக்கள் மற்றும் வருவாய்களின் நிர்வாகியாகவும் பணியாற்றுவார்.
இன்னும், மார்ச் 01, இவ்வெள்ளி, பகல் 12.30 மணிக்கு உரோம் ஆயராகிய திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ பசிலிக்காவான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவுக்கு முத்திரையிட்டுள்ளார் உதவி Camerlengo பேராயர் Pier Luigi Celata.
Sede vacante காலத்தில் வத்திக்கானின் நிர்வாகப் பணிகளைத் திருப்பீடச் செயலராகிய கர்தினால் பெர்த்தோனேயும், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கு கர்தினால்களை ஆன்மீகமுறையில் தயாரிக்கும் பொறுப்பை கர்தினால் ஆஞ்சலோ சொதானோவும் செய்து வருகின்றனர்.
கர்தினால்கள் அவையின் முதல் பொது அமர்வு மார்ச் 04, இத்திங்களன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என, கர்தினால்கள் அவையின் தலைவராகிய கர்தினால் சொதானோ அறிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.