2013-03-02 15:31:34

கற்றனைத் தூறும் - உப்பைச் சிந்தினால் ஆபத்து


பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுலம் பயன்படுத்திவரும் உப்பு, உணவுக்குச் சுவை சேர்க்கவும், உணவைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. இது மருந்தாகவும், மதச் சடங்குகளில் அடையாளப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தீய சக்திகளை வெல்வதற்கு உப்பு கலந்த நீரைத் தெளிப்பது மதச் சடங்குகளில் வழக்கம். கையளவு உப்பை எடுத்து, இடது தோள் மீது பின்புறமாய் வீசினால், அங்கு பதுங்கியிருக்கும் பேய் ஓடிவிடும் என்ற பாரம்பரியம் ஒரு சில நாடுகளில் நிலவுகிறது.
பழங்காலத்தில் உப்பு ஓர் அரியப் பொருளாக இருந்ததால், உரோமைய வீரர்களின் ஊதியமாக உப்பு வழங்கப்பட்டது. எனவே, யாரேனும் உப்பைச் சிந்தினால் அது செல்வத்தை வீணாக்கும் அடையாளமாகவும், கெடுதலை வருவிக்கும் அடையாளமாகவும் கருதப்பட்டது. இந்த எண்ணம் லியோனார்டோ டா வின்சி வரைந்த உலகப் புகழ்பெற்ற 'இயேசுவின் இறுதி இரவுணவு' ஓவியத்தில் வெளிப்படுவதாக ஓவிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள யூதாசு உருவத்தின் வலது கையில் இறுகப் பற்றியிருக்கும் பண முடிப்புக்கு அருகிலேயே சாய்ந்து கிடக்கும் ஓர் குடுவையிலிருந்து உப்பு சிந்தியிருப்பது வரையப்பட்டுள்ளது. 'உங்களில் ஒருவர் என்னைக் காட்டிக்கொடுப்பார்' என்று இயேசு சொன்னதும், அந்த அதிர்ச்சியில் யூதாசுவின் கை, உப்புக் குடுவையைத் தட்டிவிட்டது என்ற இயல்பானச் சூழலையும், சிந்திய உப்பு, நிகழப்போகும் கெடுதலைக் குறிக்கும் அடையாளம் என்ற பொருளையும் ஒரு சேர இந்த ஓவியம் உணர்த்துவதாக ஓவிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.