2013-02-28 14:44:34

மார்ச் 01, 2013 கற்றனைத்தூறும்.... திருத்தந்தையர் சில தகவல்கள்


கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையான இயேசுவின் திருத்தூதர் தூய பேதுருவுக்குப் பின்னர், திருஅவையை நீண்ட காலம் வழிநடத்தியவர் திருத்தந்தை 9ம் பத்திநாதர். இவர் 1846 முதல் 1878 வரை 32 ஆண்டுகள்வரை பதவியில் இருந்துள்ளார். அதற்கடுத்தபடியாக, முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 26 ஆண்டுகள் 168 நாள்கள் பதவியில் இருந்து 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி காலமானார்.
குறுகிய காலம் வழிநடத்தியவர்கள் என்ற வரிசையில், திருத்தந்தையர் 7ம் உர்பான் 12 நாள்களும், 6ம் பொனிபாஸ் 15 நாள்களும், 4ம் செல்ஸ்தீன் 16 நாள்களும், 3ம் பத்திநாதர் 17 நாள்களும், முதலாம் அருள் சின்னப்பர் 33 நாள்களும் பதவியில் இருந்துள்ளனர். 752ம் ஆண்டு தேர்வுச் செய்யப்பட்ட 2ம் ஸ்டீபன் பதவியேற்கும் முன் மூன்று நாட்களில் உயிரிழந்தார் எனவும் சில வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 3 பேர் 25 வயதுக்குட்பட்டும், ஏழு பேர் 25க்கும் 40 வயதுக்கு உட்பட்டும், 11 பேர் 41க்கும் 50 வயதுக்குட்பட்டும், 24 பேர் தங்களது 50வது வயதுகளிலும், 37 பேர் 61க்கும் 70 வயதுக்குட்பட்டும் இருந்தனர். மூன்று பேர் மட்டுமே 80 வயதுக்கும் மேற்பட்டு இருந்தனர். திருத்தந்தை ஒன்பதாம் பெனடிக்ட், தனது 12 முதல் 20 வயதுக்குள் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருத்தந்தை 12ம் அருளப்பர், 18ம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 996ம் ஆண்டில் 24வயது 5ம் கிரகரியும், 1513ம் ஆண்டில் 37 வயது 10ம் சிங்கராயரும், 1523ம் ஆண்டில் 44 வயது 7ம் கிளமென்ட்டும், 1978ம் ஆண்டில் 58 வயது 2ம் அருள் சின்னப்பரும், அதே ஆண்டில் 65 வயது முதலாம் அருள் சின்னப்பரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தொடக்ககாலத் திருஅவையில் திருத்தந்தையர் திருமணம் செய்வதிலிருந்து எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனவே, திருத்தந்தை ஹோர்மிதாஸ்(514-523), திருத்தந்தை சில்வேரியுசின்(536-537) தந்தையாவார். திருத்தந்தை முதலாம் கிரகரி(590-604), திருத்தந்தை 3ம் ஃபெலிக்சின்(483-492) பேரனாவார். 867ம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் ஏட்ரியனுக்குப் பிறகு எவரும் திருமணம் புரிந்தவர்களாக இல்லை.
திருத்தந்தையர்களின் பெயர்களைப் பார்த்தோமானால் அருளப்பர் என்ற பெயர்தான் 23 தடவைகளும், கிரகரி, பெனடிக்ட் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் 16 தடவைகளும், அருள் சின்னப்பர் (ஜான் பால்) என்ற பெயர் இரு தடவைகளும் வந்துள்ளன. ஆனால் 20ம் அருளப்பர் என்ற பெயரை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. 43 பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.
திருத்தந்தையர் தங்களது திருமுழுக்குப் பெயர்களிலிருந்து வேறு பெயர்களை வைக்கும் பழக்கம், 533ம் ஆண்டுதான் முதலில் தொடங்கியுள்ளது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் இயற்பெயர் மெர்க்குரி. மெர்க்குரி என்பது, அப்போது வணங்கப்பட்ட புறவினக் கடவுளின் பெயராகும். ஆகவே இவர் இரண்டாம் ஜான் எனப் புதுப்பெயரை வைத்துக் கொண்டார். 1555ம் ஆண்டு ஆட்சி செய்த திருத்தந்தை இரண்டாம் மார்செலுசுக்குப் பின்னர் எத்திருத்தந்தையும் தங்கள் இயற்பெயரை வைத்துக் கொண்டதில்லை.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட கத்தோலிக்கத் திருஅவையின் 263 திருத்தந்தையர்களுள் 205 பேர் இத்தாலியர்கள். அதிலும் 106 பேர் உரோமையர்கள். 58 பேரே வெளிநாட்டவர்கள். அதிலும் 19 என முன்னிலை வகிப்பவர்கள் பிரான்ஸ் நாட்டவர். 14 பேர் கிரேக்கர். 8 பேர் சிரியா நாட்டினர். 8 பேர் ஜெர்மானியர். 3 பேர் ஆப்ரிக்கர்கள். 2 பேர் இஸ்பானியர்கள். இன்னும் ஆஸ்ட்ரியர், பாலஸ்தீனியர், ஆங்கிலேயர், டச்சு, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவர் வீதம் திருஅவையை வழிநடத்தியிருக்கின்றனர்.
திருத்தந்தையாக இருந்த மூன்று ஆப்ரிக்கர்களும் புனிதர்கள். அவர்கள் முறையே புனிதர்கள் விக்டர், மிலிதியாதெஸ் மற்றும் முதலாம் ஜெலாசியுஸ். முறைப்படி திருஅவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக்கு எதிராகத் தாங்களே திருத்தந்தையாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவ்வாறு 38 பேர் இருந்துள்ளனர். 1449ம் வருடத்திற்குப் பின்னர் இந்நிலை உருவாகவில்லை. இவ்வாறு கடைசியாக இருந்தவர் திருத்தந்தை ஐந்தாம் பெலிக்ஸ்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் டிவிட்டர் ஊடகம் மூலம் மக்களைத் தொடர்பு கொண்ட முதல் திருத்தந்தையாவார். திருத்தந்தை 12ம் பத்திநாதர்(1939-1958) தட்டச்சை பயன்படுத்திய ஒரே திருத்தந்தையாவார். இவர், தனது அப்போஸ்தலிக்கத் திருமடல்களின் முதல் தொகுப்பு முதல் தனது அனைத்து உரைகளையும் தானே தட்டச்சில் அடித்த ஒரே திருத்தந்தையாவார்.
திருத்தந்தை 9ம் பெனடிக்ட்(1032-1044), மூன்று தடவைகள் தேர்வு செய்யப்பட்ட ஒரே திருத்தந்தையாவார்.
5ம் பத்திநாதர்(1566-1572), சமையல் புத்தகத்தை எழுதிய ஒரே திருத்தந்தையாவார். 900த்துக்கு மேற்பட்ட உணவு வகைகளை அது கொண்டிருந்தது.
தங்களது சமய வாழ்வு தவிர வேறு பணிகளையும் சில திருத்தந்தையர் கொண்டிருந்தனர். திருத்தந்தை யுசேபியுஸ்(கி.பி.310) மருத்துவர் மற்றும் வரலாற்று ஆசிரியர். திருத்தந்தை 8ம் பொனிபாஸ்(1294-1303) வழக்கறிஞர். திருத்தந்தை 2ம் பத்திநாதர்(1458-1464) கவிஞர் மற்றும் நாவலாசிரியர். திருத்தந்தை 10ம் இன்னோசென்ட்(1644-1655) புகழ்பெற்ற நீதிபதி. திருத்தந்தை 11ம் இன்னோசென்ட்(1676-1689) வங்கியில் வேலை செய்தவர்.
திருத்தந்தையர் 3ம் ஸ்டீபனும், முதலாம் பவுலும் சகோதரர்கள். அதேபோல் 19ம் அருளப்பரும், 8ம் பெனடிக்டும் சகோதரர்கள்.







All the contents on this site are copyrighted ©.