2013-02-28 19:16:11

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் மக்களைச் சந்தித்த இறுதி நிகழ்ச்சி


பிப்.28,2013. இவ்வியாழன் மாலை சரியாக 5 மணி 7 நிமிடங்களுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் உள்ள திருத்தந்தை இல்லத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்குச் மாலை 05.23 மணிக்குச் சென்றடைந்தார்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அவ்வில்லத்தின் மேல் மாடத்திலிருந்து சந்தித்தார். மக்களின் ஆரவாரம் அடங்கியதும், அவர்களிடம் தன் மனதிலிருந்து எழுந்த வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார். வழக்கமாக தன் உரைகளை எழுதி வாசிக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் இறுதி பொது உரையை உள்ளத்திலிருந்து எழுந்த வார்த்தைகளாகப் பகிர்ந்து கொண்டது அழகாக இருந்தது. கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய இறுதி பொது உரையின் மொழிபெயர்ப்பு:
அன்பர்களே, இயற்கையின் அழகும், உங்கள் பரிவும் சூழ்ந்துள்ள இவ்விடத்தில் உங்கள் அன்பையும், நட்பையும் சுவைக்க வந்திருப்பது எனக்கு மிக்க மகிழ்வளிக்கிறது. ஏனைய நாட்களைவிட இது மிகவும் வேறுபட்ட ஒரு நாள். இன்றிரவு எட்டு மணியிலிருந்து நான் திருஅவைத் தலைவர் அல்ல. நான் வெறும் திருப்பயணி. என் வாழ்வின் இறுதிப்பகுதிப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருப்பயணி.
என் மனம், அன்பு, செபம், சிந்தனை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, திருஅவையின் நலனுக்காகவும், மனுக்குலத்தின் நலனுக்காகவும் இன்னும் உழைப்பேன். உங்களுடைய பரிவு என்னைத் தாங்கி நிற்கும் என்பதை உணர்கிறேன். திருஅவையின் நன்மை இவ்வுலகில் இன்னும் சிறந்து விளங்க நாம் ஆண்டவருடன் நடைபயில்வோம்.
என் மனம் நிறைந்த ஆசீரை உங்களுக்கு வழங்குகிறேன். எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நன்றி. உங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம்.
இவ்வியாழன் இரவு 8 மணிக்கு காஸ்தெல் கந்தோல்ஃபோ இல்லத்தின் தலைவாசல் கதவு மூடப்பட்டது. அதுவரை அங்கு காவலுக்கு நின்ற சுவிஸ் காவல் வீரர்கள் அங்கிருந்து கிளம்பி வத்திக்கானை அடைந்தனர். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவிக் காலம் நிறைவுற்றது என்பதை இச்சடங்குகள் காட்டின.








All the contents on this site are copyrighted ©.