2013-02-28 18:42:39

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குப் பிரியாவிடை


பிப்.28,2013. அன்பு நேயர்களே, 2013ம் ஆண்டு பிப்ரவரி 28 வியாழன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணியின் இறுதி நாள். இந்நாளில் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு இப்பதவியிலிருந்து விலகினார். இந்த இறுதி நாளில் உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் 144 கர்தினால்களைச் சந்தித்து உரையாற்றினார். திருஅவை இவ்வுலகில் இருந்தாலும் இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அது வாழும் உடல். எனவே, இது முன்னரே குறிக்கப்பட்ட திட்டங்களின்படி வடிவமைக்கப்பட்டு இயங்குவது அல்ல. இதற்கு ஒரு சான்றாக, இப்புதன்கிழமை மறைபோதகம் இருந்தது. இது ஆன்மாக்களில் திருஅவை விழிப்படைந்ததைக் காட்டியுள்ளது. என் சகோதரக் கர்தினால்களாகிய உங்கள் அனைவருடனும் நான் வாழ்ந்த இந்த எட்டு ஆண்டுகளில் ஒளி மிகுந்த அழகான நாள்களும், மேகங்கள் சூழ்ந்த நாள்களும் இருந்தன என்றார். உங்களில் ஒருவர் அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும், புதிய திருத்தந்தைக்கு எனது நிபந்தனையற்ற மரியாதையையும் பணிவையும் தெரிவிக்கிறேன் என்றும் கர்தினால்களிடம் உறுதி கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3 இச்சந்திப்பில், கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அனைத்துக் கர்தினால்கள் சார்பாக, திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். தாங்கள் செய்த அத்தனைக்கும் கடவுள் பிரதிபலனை நல்குவாராக என்றும் கர்தினால் சொதானோ திருத்தந்தையிடம் கூறினார். இச்சந்திப்பின் முடிவில், தமிழகக் கர்தினால் சைமன் லூர்துசாமி உட்பட ஒவ்வொருவராகத் திருத்தந்தையை வாழ்த்தினர். மாலை 4.55 மணிக்கு வத்திக்கான் San Damaso வளாகத்திலிருந்து ஹெலிகாப்டர் தளத்துக்குக் காரில் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அதற்கு முன்னதாக, திருப்பீடச் செயலகத் தலைவர்கள் மற்றும் Swiss Gurads என்ற பாப்பிறையின் மெய்க்காப்பாளர்களின் வாழ்த்துக்களையும் பெற்றார். உள்ளூர் நேரம் மாலை 5.07 மணிக்கு வத்திக்கானிலிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்கு, இத்தாலிய அரசின் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய மணிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்துள்ள காஸ்தெல் கந்தோல்ஃபோ, உரோமைக்குத் தெற்கே 24 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மலைப்பாங்கான ஊராகும். மாலை 5.23 மணிக்கு காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்றடைந்த திருத்தந்தையை அந்நகர் மேயர், அல்பானோ ஆயர், கர்தினால் பெர்த்தெல்லோ உட்பட சில தலைவர்கள் வரவேற்றனர். அப்போதும் ஆலய மணிகள் ஒலித்து அவரை வரவேற்றன. காஸ்தெல் கந்தோல்ஃபோ அப்போஸ்தலிக்க மாளிகைக்கு முன்வளாகத்தில் அல்பானோ மறைமாவட்ட விசுவாசிகளைச் சந்தித்து வாழ்த்தி, தனது ஆசீரை அளித்தார். நன்றி என்ற விளம்பரத் துணிகளை வைத்துக் பாப்பிறைக் கொடிகளுடன், பாப்பிறை வாழ்க, Viva il Papa என்று பலத்த குரல் எழுப்பி வரவேற்றனர்.
அம்மக்களிடம் பேசிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, உங்களோடு இருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். உங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள். மற்ற தடவைகள் போல இன்று நான் இங்கு வரவில்லை. இன்று இரவு 8 மணிக்குமேல் நான் திருஅவையிந் தலைவர் அல்ல. நான் ஒரு சாதாரண பயணியாக இங்கு வந்துள்ளேன். எனது முழு ஆன்மா, எனது முழு இதயம், முழு சக்தி, செபம் ஆகியவற்றோடு திருஅவைக்கும் உலகுக்கும் இன்னும் பணியாற்ற விரும்புகிறேன். நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்றார். RealAudioMP3
பின்னர் நன்றி, நன்றி என்று சொல்லி எனது ஆசீரை அளிக்கிறேன் என்று ஆசீர் வதித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3
இந்த இறுதி நாளில் திருத்தந்தை அனுப்பிய டிவிட்டர் செய்தியில், உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு நீங்கள் என்றும் மகிழ்வை அனுபவிப்பீர்களாக என்று எழுதியுள்ளார்.
இந்த காஸ்தெல் கந்தோல்ஃபோ நிகழ்வுதான் திருத்தந்தையின் பாப்பிறைப் பணியின் கடைசி நிகழ்வாகும். இதன் அடையாளச் சின்னமாக, உள்ளூர் நேரம் இரவு 8 மணிக்கு காஸ்தெல் கந்தோல்ஃபோ மாளிகையின் பெரிய கதவு மூடப்பட்டது. பாப்பிறைகளுக்கு மட்டுமே மெய்க்காப்பாளர்களாகப் பணிபுரியும் Swiss Gurads அவ்விடத்தைவிட்டு அகன்றனர். இவ்வியாழன் இரவு 8 மணிக்குப் பின்னர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், முன்னாள் திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தக் கடைசி நாளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வியட்னாமின் Xuân Lôc மறைமாவட்டத்தின் துணை ஆயராக பேரருள்திரு Joseph Dinh Duc Dao அவர்களையும், Argentinaவின் Villa María மறைமாவட்டத்தின் ஆயராக அருள்திரு Samuel JOFRÉ நியமித்தார். பிரான்சின் Tours உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் Jean Honoré அவர்களின் இறப்பையொட்டி, அவரைச் சார்ந்துள்ளவர்களுக்குத் தனது அனுதாபச் செய்தியையும் அனுப்பியுள்ளார். இறுதி நாள்வரை தனது பணியை அயராது, நிறைவாகச் செய்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவருக்கு வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நாம் அனைவரும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவிப்போம்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி 120 கோடி கத்தோலிக்கரின் தனிப்பெரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ஜோசப் அலாய்சியஸ் இராட்சிங்கர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்ற பெயரைத் தெரிவு செய்து திருஅவையின் 265வது பாப்பிறையானார். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 8வது திருத்தந்தையாக, ஏப்ரல் 24ம் தேதி பாப்பிறைப் பொறுப்பை ஏற்றார். திருத்தந்தையர் 2ம் பொனிபாஸ், 2ம் கிளமென்ட், 2ம் தமாசுஸ், 5ம் கிரகரி, 9ம் ஸ்டீபன், 2ம் விக்டர் ஆகியோர் ஜெர்மானியர்கள். 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, தனது பெற்றோருக்கு 3வது குழந்தையாகப் பிறந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 1977ம் ஆண்டில் Munich-Freising உயர்மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டார். அவ்வாண்டிலே திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். மேய்ப்புப்பணியில் குறைந்த அனுபவம் மிக்க ஒருவர் கர்தினாலாக உயர்த்தப்படுவது அசாதரணமானதாகும். 1981ம் ஆண்டில் திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் அவரது வாழ்வு திருப்பீடத் தலைமையகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பருக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவராகவும், மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார். கர்தினால்கள் அவையில் மிகவும் மதிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துபவராகவும், திருஅவை செல்லவேண்டிய முறைகளை நிர்ணயிப்பவராகவும் அவர் திகழ்ந்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது இந்த எட்டு ஆண்டுகாலப் பாப்பிறைப் பணிக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா, இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ், கியூபாவின் முன்னாள் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ, போன்ற தலைவர்களைச் சந்தித்துள்ளார். 2007ல் சவுதி அரசர் அப்துல்லாவையும், 2013ல் வியட்னாம் கம்யூனிசக் கட்சித் தலைவரையும் சந்தித்துள்ளார். இவ்வாறு திருப்பீடத்தோடு முழு அரசியல் உறவு இல்லாத நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளார். புனித பூமி, லெபனன், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கியூப கம்யூனிச நாடு என ஐந்து கண்டங்களுக்கும் சென்றுள்ளார். 24 வெளிநாட்டுத் திருப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆப்ரிக்காவுக்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளார். 2010ல் புனித பூமி சென்று புலம்பல் சுவரில் தனது செபத்தை விட்டுவந்துள்ளார். இந்த எட்டு ஆண்டுகாலப் பணியில், மத சுதந்திரம், கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு, மனித உரிமைகளும் மாண்பும் மதிக்கப்படுதல் போன்ற முக்கிய விவகாரங்களுக்காக அதிகமாகக் குரல் கொடுத்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம், புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர் பிரச்சனை போன்ற விவகாரங்கள் களையப்படக் குரல் எழுப்பினார். வன்முறைகளால் துன்புறும் மக்களுடன், குறிப்பாக அடக்குமுறைகளால் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் தான் எப்போதும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இறைவனே அன்பு, நம்பிக்கை, உண்மையில் பிறரன்பு என மூன்று அரும்பெரும் அப்போஸ்தலிக்கத் திருமடல்களை வெளியிட்டுள்ளார். இம்மடல்கள், அன்பு மற்றும் பிறரை மதிப்பதில், வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதையும், உலகளாவியப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு நாடுகளுக்கு உதவும் வழிகளையும் இம்மடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், அனைத்துலக ஆயர்கள் மாமன்றங்களைக் கூட்டியதன் பயனாக, நான்கு அப்போஸ்தலிக்க ஏடுகளையும் வெளியிட்டுள்ளார். திருநற்கருணை, இறைவார்த்தை, ஆப்ரிக்காவில் திருஅவை, மத்திய கிழக்கில் திருஅவை ஆகியவை பற்றி இந்த ஏடுகள் கூறுகின்றன. பெருமளவான அரசு ஏடுகளையும், 129 அப்போஸ்தலிக்க கடிதங்களையும், 116 அப்போஸ்தலிக்க சட்ட அமைப்புகளையும் வெளியிட்டுள்ளார். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையின் ஒழுங்களில் சில மாற்றங்களையும் இத்திங்களன்று வெளியிட்டு, தெளிவுபடுத்தியுள்ளார். நம்பிக்கை ஆண்டையும் அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதி புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களது கருத்துக்களையும் கேட்போம்.
RealAudioMP3 2,872 நாள்கள் பாப்பிறைப் பணியைச் சிறப்புடன் முடித்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த 600 ஆண்டுகால திருஅவை வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வு ஒன்றை நிகழ்த்தி, வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் திருத்தந்தையாக இருக்கிறார். ஆழ்ந்த ஆன்மீகமும் செபப்பற்றும் துணிச்சலும் தாழ்ச்சியும் மனிதாபிமானமும் நிறைந்த இவருக்காக நாம் செபிப்போம். விசுவாச ஆண்டை அறிவித்து நம்மை விசுவாசத்தில் ஆழப்படுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் போதனை வழி செல்வோம்.







All the contents on this site are copyrighted ©.