திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு உலகக் கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு நன்றி
பிப்28,2013. மனிதகுலத்தில் பெண்களுக்குச் சமமான உரிமைகளும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும்
என்பதையும், சமுதாய, கலாச்சார வழிகளில் பெண்கள் அடையும் புறக்கணிப்பை நீக்க போராடவேண்டும்
என்பதையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எடுத்துரைத்ததற்கு உலகக் கத்தோலிக்கப்
பெண்கள் அமைப்பு நன்றியைத் தெரிவித்துள்ளது. விசுவாச வாழ்வின் வேர்களை நற்செய்தியில்
காணவேண்டும் என்று தான் சென்ற இடங்களிலெல்லாம் திருத்தந்தை கூரிவந்ததற்கும் இவ்வமைப்பு
நன்றி தெரிவித்துள்ளது. பெண்கள் இவ்வுலகில் முழுமையான இடம் பெறவேண்டும் என்பதை, திருஅவையும்,
உலகமும் உணர வேண்டும்; இல்லையெனில், நம் உலகம் மனிதத் தன்மையை இழக்க வேண்டியிருக்கும்
என்று திருத்தந்தை ஆப்ரிக்க ஆயர்களுக்கு வழங்கிய AM என்ற அப்போஸ்தலிக்க அறிவுரையில் கூறியிருப்பதை
இவ்வமைப்பினர் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். தலைமைப் பணியிலிருந்து விலகி,
செபத்தில் வாழ்வைக் கழிக்கவிருக்கும் திருத்தந்தைக்கு இறைவன் நல்ல உடல்நலனையும், அமைதியையும்
வழங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இவ்வமைப்பினர் தங்கள் செய்தியை நிறைவு செய்துள்ளனர்.