2013-02-27 16:18:32

பேராயர் மம்பெர்த்தி - இன்றைய உலகில் மனித உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பது அரிதாகி வருகிறது


பிப்.27,2013. அனைத்து மக்களுக்கும் மனித உரிமைகள் சமமாகக் கிடைக்கவேண்டும் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1993ம் ஆண்டு வியன்னா உலக மாநாட்டில் உறுதி எடுக்கப்பட்டபோதிலும், இன்றைய உலகில் மனித உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பது அரிதாகி வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 26, இச்செவ்வாயன்று ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் அவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய நாடுகளுடனான உறவுகளின் திருப்பீடப் பொதுச்செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் பற்றிய அகில உலக அறிக்கையை உலகின் பல நாடுகள் பலவகையில் அர்த்தம் கொள்வதாலும், அடிப்படை மனித மாண்பை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதாலும் நமது பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று பேராயர் மம்பெர்த்தி எடுத்துரைத்தார்.
மத உரிமை, நீதி, அமைதி ஆகிய விழுமியங்களின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.
கத்தோலிக்கத் திருஅவையும், திருத்தந்தையர்களும் மனித மாண்பினை வலியுறுத்தி வந்துள்ளனர் என்றும், மனித உரிமைகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் பேராயர் மம்பெர்த்தி சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.