2013-02-27 17:26:38

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : நான் சிலுவையைக் கைவிடேன், ஆயினும், புதிய வழியில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பேன்


பிப்.27,2013. 600 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வு இவ்வியாழனன்று மீண்டும் இடம்பெற உள்ளது. ஆம். திருத்தந்தை ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னர் மக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து விடைபெற விரும்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வழக்கத்திற்கு மாறாக மக்களனைவரையும் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்தார். குளிர் காலத்தில் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெறுவது வழக்கம். கடந்த ஞாயிறன்று திருத்தந்தையின் இறுதி ஞாயிறு நண்பகல் உரையைக் கேட்கவந்த கூட்டத்தைப் பார்த்த திருஅவை அதிகாரிகள், பெருமெண்ணிக்கையிலான மக்களை எதிர்பார்த்ததையொட்டி, தூய பேதுரு வளாகத்திலேயே திருத்தந்தையின் மக்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். திருத்தந்தையின் இறுதி உரைக்குச் செவிமடுக்க, புதன் காலை 7 மணிக்கே மக்கள் உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூட ஆரம்பித்தனர். உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, இந்திய நேரம் மாலை 3மணிக்கு ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வளாகத்திற்குள்ளேயும் வெளியேயும் குழுமியிருக்க, முதலில் அவ்வளாகத்தில் காரில் வலம் வந்தார் திருத்தந்தை. அவருக்குப் பிரியாவிடை வழங்க வந்திருந்த மக்களை நோக்கி கையசைத்து ஆசீர் வழங்கிக்கொண்டு வந்த திருத்தந்தை, சிறு குழந்தைகளைப் பெற்று முத்தமிடவும் செய்தார். கூட்டத்தில் பலர் 'திருத்தந்தைக்கு நன்றி' என்ற அட்டைகளைத் தாங்கி நின்றனர். வளாகத்தினுள் மக்களிடையே ஒரு வலம் வந்த பின்னர், அங்குக் குழுமியிருந்த அனைவருக்கும் தன் இறுதி உரையை வழங்கினார் பாப்பிறை. RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே!
எனது இந்த இறுதி புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்ள இவ்வளவு பெருமெண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பும் பாசமும் நன்றியும் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதிக்குப் பின்னர், இந்த எட்டு ஆண்டுகளில் நம் ஆண்டவர் என்னை உண்மையிலேயே வழிநடத்தினார். அவர் எனக்கு மிக நெருக்கமாக இருந்தார். தினமும் அவரது பிரசன்னத்தை என்னால் உணர முடிந்தது என்று என்னால் சொல்ல முடியும். இந்த ஆண்டுகள், திருஅவையின் திருப்பயணத்தில் மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த நேரங்களாகவும், அதேசமயம் கடினமான தருணங்களாகவும் இருந்தன. இப்போது நான் சிலுவையைக் கைவிடேன், ஆயினும், புதிய வழியில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பேன். செபம் மற்றும் தியானம் மூலம் திருஅவையின் பயணத்தில் தொடர்ந்து செல்வேன். புனித பவுல், கொலேசேயருக்கு எழுதிய திருமடலில், "உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்" எனக் கூறுகிறார். எனது இதயமும் இறைவனுக்கான நன்றியால் நிறைந்துள்ளது. அவரே திருஅவையையும், விசுவாசத்திலும் அன்பிலுமான அதன் வளர்ச்சியையும் கண்காணிக்கிறார். நன்றியிலும் மகிழ்விலும் உங்களனைவரையும் நான் அணைத்துக்கொள்கிறேன். திருஅவையின் வாழ்விலும் நம் வாழ்விலும் இறைஇருப்பின் மீதான நம் மகிழ்ச்சி நிறை நம்பிக்கையை புதுப்பிக்க நாம் இந்த நம்பிக்கை ஆண்டில் அழைப்புப் பெறுகிறோம். தூய பேதுருவின் வழித்தோன்றலாக நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் இறைவன் காட்டிய தொடர்ந்த அன்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நான் தனிப்பட்டமுறையில் நன்றியுள்ளவனாக உள்ளேன். என்னைப் புரிந்து கொண்டதற்கும், ஆதரவு வழங்கியதற்கும், செபங்களுக்கும் இங்கு உரோம் நகரில் மட்டுமல்ல, உலகம் முழுமையும் உள்ள மக்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நீண்ட செபத்திற்குப்பின் நான் எடுத்த இந்தப் பணிஓய்வு குறித்த முடிவு, இறைவிருப்பத்தில் கொண்டுள்ள முழு நம்பிக்கை மற்றும் அவரின் திருஅவை மீது கொண்டுள்ள ஆழமான அன்பின் கனியாகும்.
RealAudioMP3 என் செபங்கள் மூலம் நான் திருஅவையுடன் தொடர்ந்து இணைந்து நடப்பேன். எனக்காகவும் வரவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகவும் செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்னைமரியோடும் அனைத்துப் புனிதர்களோடும் இணைந்து விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நம்மை இறைவனிடம் ஒப்படைப்போம். அவரே நம் வாழ்வின்மீது அக்கறை கொண்டு பராமரிக்கிறார். வரலாற்றின் பாதையில் இவ்வுலகையும் திருஅவையையும் வழிநடத்துபவரும் அவரே. மிகுந்தபாசத்தோடு உங்கள் அனைவரையும் இறைப்பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். இறைவனால் மட்டுமே தரவல்லவாழ்வின் முழுமைக்கு உங்கள் இதயங்களைத் திறக்கஉதவும் நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுகிறேன். உஙகளுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் என் ஆசீரை அளிக்கிறேன். நன்றி என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3 இந்தப் புதன் பொது மறைபோதகம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது 348வது புதன் பொது மறைபோதகமாகும். இந்த மறைபோதகத்தில், “நாங்கள் உங்களுக்காக இங்கு இருக்கிறோம்”, “உங்களது வார்த்தைகள் என்றென்றும் ஒளியாக இருக்கின்றன”, “நன்றி”, “நன்றி பெனடிக்ட்”, “நாங்கள் உங்களைப் பிரிவதற்காக வருந்துகிறோம்” போன்ற பல விளம்பரத் துணிகளை வத்திக்கான் வளாகத்தில் காண முடிந்தது. ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, இத்தாலி, இஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், அர்ஜென்டினா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், மெக்சிகோ, இந்தோனேசியா, செனெகெல், குரோவேஷியா, சுலோவேனியா, நைஜீரியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பல கொடிகளையும், சீனக் கொடியையும் காண முடிந்தது. இந்தப் புதன் மறைபோதகத்துக்கு முன்னர், கடந்த வாரம்வரை திருத்தந்தையின் மறைபோதகங்களில் 51,16,600 மக்கள் கலந்து கொண்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி தனது முதல் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.