2013-02-27 16:18:09

அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் Conclave கர்தினால்கள் அவை, மார்ச் மாதம் 4ம் தேதிக்கு முன்னதாக ஆரம்பமாகும் வாய்ப்பில்லை


பிப்.27,2013. அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் Conclave கர்தினால்கள் அவை, மார்ச் மாதம் 4ம் தேதிக்கு முன்னதாக ஆரம்பமாகும் வாய்ப்பில்லை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
பிப்ரவரி 28, இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியபின், உரோம் நேரம் இரவு எட்டுமணியிலிருந்து தலைமைப் பீடம் காலியாகும்.
இதைத் தொடர்ந்து, கர்தினால்கள் குழுமத்தின் தலைவராக பணியாற்றும் கர்தினால் Angelo Sodano, மார்ச் மாதம் முதல் தேதியன்று உலகின் அனைத்து கர்தினால்களுக்கும் இத்தகவலை அதிகாரப் பூர்வமாக அறிவித்து, அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள கர்தினால்களை, அதாவது, 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களை Conclave அவைக்கு வரும்படி அழைப்பு விடுப்பார்.
மார்ச் மாதம் 1 அல்லது 2ம் தேதிகளில் உரோம் நகரில் பொறுப்பில் உள்ள கர்தினால்கள் கூடி, Conclave அவை கூடக்கூடிய தேதியைத் தீர்மானிப்பர். இந்த முடிவை அறிவித்து, கர்தினாகளுக்கு அனுப்பப்படும் அழைப்பு மடல், உலகின் பல பகுதிகளில் உள்ள கர்தினால்களுக்கு மின்னஞ்சல்கள் மற்றும் FAX செய்திகள் வழியாக அனுப்பப்படும்.
Conclave நேரத்தில் பயன்படுத்தப்படும் புனித மார்த்தா இல்லத்தில் உள்ள தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி இணைப்புக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, அவ்வில்லத்தில் தங்குவோர் வெளி உலகுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.
எனவே, Conclave ஆரம்பமாகும் நாளின் முந்திய மாலையில் மட்டுமே அங்கு கர்தினால்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வில்லத்தில் உள்ள அறைகள் சீட்டுக் குலுக்கல் முறையில் கர்தினால்களுக்கு வழங்கப்படும்.
இத்தகவல்களை அருள்தந்தை Lombardi இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.








All the contents on this site are copyrighted ©.