2013-02-26 15:23:07

பிப்.27, கற்றனைத் தூறும் சுறுசுறுப்பான எறும்புகள்


குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினம் எறும்புகள். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது சமூக ஒழுக்கமுள்ள வாழ்வைக் கொண்டுள்ளன. எறும்புகளிடையே பயன்படுத்தப்படும் வேதியல் தகவல்தொடர்பு (Chemical communication) நுட்பமானது, சிக்கலானது, வியப்பூட்டுவது.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்பம் அதிகமுள்ள இடங்களிலேயே வாழ்கின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் Antartica என்று சொல்லப்படும் தென் பனிமுனைப் பகுதியாகும். 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 22,000 எறும்பு இனங்கள் (species) இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ 11 முதல் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், எறும்புகள் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றனர். மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே, ஏறும்புகள் இன்னும் அழியாத ஓர் இனமாக வாழ்வதற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
உடலைவிட பெரியதான தலை கொண்ட உயிரினம், பூச்சி இனத்தில் மிகுந்த அறிவுகொண்டது, எப்போதுமே தூங்காமல் சுறுசுறுப்பாய் வேலை பார்ப்பது, போன்ற அம்சங்களைக் கொண்ட எறும்புகள், தங்கள் மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.