2013-02-26 15:56:49

16ம் நூற்றாண்டு இயேசு சபை துறவியைப் பின்பற்றி, உரோமைக்கு நடைப்பயணம்


பிப்.26,2013. CLC என்ற கிறிஸ்தவ வாழ்வுக் குழு தனது 450ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்துவரும்வேளை, இத்தயாரிப்பின் ஒரு கட்டமாக, இக்குழுவினர் 16ம் நூற்றாண்டு இயேசு சபை துறவியைப் பின்பற்றி, ஐரோப்பா முழுவதிலுமிருந்து உரோமைக்கு கால்நடைத் திருப்பயணத்தை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
Jean Leunis என்பவர் புனித இஞ்ஞாசியாரைச் சந்தித்து இயேசு சபையில் சேருவதற்காக 1556ம் ஆண்டு பெல்ஜியத்தின் Liege நகரிலிருந்து உரோமைக்குக் கால்நடையாக ஒரு திருப்பயணத்தை மேற்கொண்டார். இதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் உரோமையில் Prima Primaria என்ற குழுவை உருவாக்கினார். இதுவே மாதா சபையும் CLC குழுவும் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
இஞ்ஞாசியாரின் பொதுநிலைத் தோழர்கள் என்ற இந்த CLC குழு, வருகிற ஏப்ரல் 6ம் தேதியன்று பெல்ஜியத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கவுள்ளது. இந்தப் பயணம் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கப்படும். இப்பயணத்தில் பங்கேற்கும் அனைவரும் உரோமையில் கூடுவர். இயேசு சபை அதிபர் அருள்தந்தை Adolfo Nicolás இவர்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார்.
நாம் அனைவரும் இவ்வுலக வாழ்வில் பயணிகள். புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சிகளைப் பின்பற்றி இயேசுவைப் பின்தொடர அழைக்கப்படுகிறோம் என்பதை இந்தக் கால்நடைத் திருப்பயணம் வலியுறுத்துகிறது என்று இதனை ஏற்பாடு செய்பவர்கள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.