2013-02-25 17:19:30

கச்சத்தீவில் நடத்தப்பட்ட புனித அந்தோனியார் ஆலய விழாவில் 10,000 திருப்பயணிகள்


பிப்.25,2013. இலங்கைக்கு வடக்கேயுள்ள கச்சத்தீவில் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்ட புனித அந்தோணியார் ஆலய விழாவில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த ஏறத்தாழ 10,000 திருப்பயணிகள் கலந்து கொண்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை மாலை தவக்கால நிகழ்ச்சியாக சிலுவைப்பாதையும், திருவிழாவையொட்டி, திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் இடம்பெற்றன. திருப்பலிக்குப் பின், இலங்கை இராணுவத்தினர் நடத்திய வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இவ்வாண்டு முதன்முறையாக இடம்பெற்றன.
யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் ஞாயிறு காலை திருப்பலியை நிறைவேற்றி, பக்தர்களை ஆசீர்வதித்ததுடன், கோவில் அருகே கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் கெபியையும் திறந்து வைத்தார்.
இராமேஸ்வரத்திலிருந்து 26 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவில் இவ்வாண்டு திருவிழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்ததாக செய்தி நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.