2013-02-25 17:12:28

Conclave குறித்த திருஅவைச் சட்டத்தில் சிறுமாற்றம்


பிப்.25,2013. ஒரு திருத்தந்தைக்குப் பின், அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன் இணைந்துவரும் கர்தினால்களின் சிறப்பு அவையைக் கூட்டுவதற்கு, குறைந்த அளவு 15 நாட்கள் இடைவெளி கொடுக்கப்படவேண்டும் என்ற திருஅவைச் சட்டத்தில் சிறுமாற்றத்தை ஏற்படுத்தி, விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் தனிப்பட்ட கருத்துக்கள் என்ற பெயரிலான 'Motu Proprio' என்ற ஏட்டை இத்திங்களன்று வெளியிட்ட திருத்தந்தை, உலகிலுள்ள அனைத்து கர்தினால்களும் Conclave எனப்படும் இந்தச் சிறப்பு அவைக்கு வந்துவிட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டால், இந்த 15 நாட்கள் என்ற விதி கடைபிடிக்கப்படத் தேவையில்லை; அதற்கு முன்னதாகவே இந்த அவை கூட்டப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க வயதுடைய எந்தக் கர்தினாலும், எந்தக் காரணத்திற்காகவும் Conclave அவையில் பங்கேற்பதிலிருந்து விலக்கி வைக்கப்படக்கூடாது; கர்தினால்கள் தங்கியிருக்கும் இல்லமும், திருவழிபாட்டுத் தலங்களும், வாக்குப்பதிவு இடம்பெறும் சிஸ்டைன் (Sistine) சிற்றாலயமும் வெளி உலகுடன் எவ்வகையிலும் தொடர்பின்றி இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்ற விதிகளை, தன் ஏட்டில் கூறியுள்ள திருத்தந்தை, கர்தினால்கள் தங்கியிருக்கும் Santa Marta என்ற சிறப்பு இல்லத்திலிருந்து சிஸ்டைன் கோவிலுக்குச் செல்லும் வழியிலும் யாரும் அவர்களைச் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதியத் திருத்தந்தையைத் தெரிவுசெய்யும் தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகள் எடுக்கவேண்டிய வாக்குறுதிகள் பற்றியும், தேர்தல் குறித்தச் சட்டங்களை மீறுவோர் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்படும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.