2013-02-23 17:05:27

திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்


பிப்.23,2013. கலைநயம் மிகுந்த விசுவாசம், செபவாழ்வின் கலைநயத்தையும் வெளிப்படுத்தும் என்ற தலைப்பில், ஆண்டு தியானத்தில் ஒருவாரம் ஈடுபட்டிருந்த தன்னோடு ஆன்மீஅகப் பயிற்சிகளில் பயணம் செய்த அனைவருக்கும் நன்றிகூற விளைவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் தியானத்தின்போது தன்னோடு இருந்து இந்த ஆன்மீகப்பயணத்தில் பங்குபெற்ற திருப்பீட அதிகாரிகளுக்கும், இந்நாட்களில் செபம் மூலம் தன்னோடு துணை நின்ற விசுவாசிகளுக்கும் நன்றி சொல்வதாக இச்சனிக்கிழமை காலை உரை வழங்கியத் திருத்தந்தை, வார்த்தை என்பது இதயமுடையது அதுவே அன்புமாகும் என்று கூறினார். உண்மை என்பது அழகு நிரம்பியது, உண்மையும் அன்பும் எப்போதும் இணைந்துச் செல்கின்றன என மேலும் கூறினார்.
படைத்தவை அனைத்தையும் நல்லதென இறைவன் கண்டதாக விவிலியத்தில் நாம் வாசிக்கும் அதேவேளை, இன்றைய உலகில் தீமை, துன்பம், ஊழல் என்ற நிலைகளே அதிகம் காணப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
மனுவுருவான வார்த்தை முள்மகுடம் கொண்டு முடிசூட்டப்பட்டாலும், இந்த இறைமகனின் துன்பத்திலேயே நாம் மீட்பரின் ஆழமான அழகைக் கண்டுகொள்கிறோம் என்ற திருத்தந்தை, இருளின் அமைதியில் வார்த்தையைத் தெளிவாகக் கேட்கமுடியும் என்றார்.
இந்த ஒருவார தியானத்திற்காக மட்டும் நான் உங்களுக்கு நன்றிகூறவில்லை, மாறாக, கடந்த எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் நான் பணியாற்றியபோது, உங்களுடைய திறமைகள், அன்பு, பாசம், நம்பிக்கை ஆகியவற்றோடு என்னுடன் பயணம் செய்ததற்காக நன்றி கூற விழைகிறேன்.
வெளிப்பார்வைக்கு நம்மிடையே உள்ள உறவு முடிந்துள்ளதாக தெரிந்தாலும் நம்முடைய ஆழமான ஒன்றிப்பும், நெருக்கமும் செபத்தின் வழி என்றும் நிலைத்திருக்கும் என திருப்பீட அதிகாரிகளிடம் மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.