2013-02-22 15:49:04

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் - மன்னாரு ஆயர்


பிப்.22,2013. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு குறைக்கப்படவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் மன்னாரு ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் 133 அருள் பணியாளர்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இம்மாதம் 25 முதல் மார்ச் 22 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் விருப்பத்துடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும், காணாமற் போனவர்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கவும் இலங்கை அரசை ஐ.நா. அவை வற்புறுத்த வேண்டும் என்று இம்மடலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அவை கூறிய முடிவுகளை இலங்கை அரசு எவ்வளவு தூரம் கடைபிடித்துள்ளது என்பது பற்றிய நடுநிலையான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இம்மடலில் கோரப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.