திருத்தந்தை ஆற்றிய உரைகளைக் கேட்டபின்னர், கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின்
மீது ஓர் ஈர்ப்பு உருவானது - Lenin Raghuvanshi
பிப்.21,2013. ஆன்மீகத் தலைவரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் படிப்பினைகளுக்கு
செவிமடுப்பது மனித சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்று மனித நல சிந்தனையாளரான
ஓர் இந்தியர் கூறியுள்ளார். மனித உரிமைகள் பற்றிய கண்காணிப்புக் கழகம் என்ற அமைப்பை
இந்தியாவின் வாரணாசியில் நடத்திவரும் மனித நல சிந்தனையாளர் Lenin Raghuvanshi, ஆசிய செய்தி
நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். தான் இந்து மதத்தில்
பிறந்தவர் என்றாலும், அம்மதத்தில் சாதி முறைகள் பெரிதும் வலியுறுத்தப்பட்டு, தலித் மக்கள்
தீண்டத்தகாதவர்கள் என்பதைக் கூறியதால் தான் இந்து மதத்தைவிட்டு விலகியதாகக் கூறிய Raghuvanshi,
மதங்கள் மீது தனக்கிருந்த வெறுப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஒரு சில உரைகளைக்
கேட்ட பிறகு குறைந்தது என்று கூறினார். மனித உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு முன், ஒவ்வொரு
மனிதருக்கும் உரிய அடிப்படை மதிப்பை அளிக்கவேண்டும் என்று ஐ.நா. அவையில் திருத்தந்தை
பேசியது, தன்னைப் பெரிதும் கவர்ந்ததென்று கூறிய Raghuvanshi, திருத்தந்தை ஆற்றிய பல்வேறு
உரைகளைக் கேட்டபின்னர் கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு
உருவானது என்பதையும் எடுத்துரைத்தார். அன்பும் பரிவும் நீதியோடு இணைந்து செல்லவேண்டும்
என்று திருத்தந்தை தன் உரைகளில் சொல்லிவருவது கிறிஸ்துவின் மீது தனக்குள்ள மதிப்பைக்
கூட்டியுள்ளது என்றும் Raghuvanshi கூறினார்.